இலங்கையில் கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்தத்தின் இறுதிக் கட்ட சம்பவங்கள் பற்றி பொறுப்பு சொல்லும் இலங்கையின் கடப்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறும் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷியர் ஒருவரும் ஒஸ்ரியர் ஒருவரும் இடம்பெறுகிறார்கள்.
அரசாங்க படையினர், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இரு சாராருமே புரிந்ததாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இறுதியில் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் விசாரணை ஒன்றுக்கு வழிவகுக்கக் கூடிய இந்த நிபுணர்கள் குழுவில் இடம்பெறுவோர் பற்றிய விவரங்கள் அடுத்த வாரம் நியூயோர்க்கில் வெளியிடப்பட இருக்கிறது.
கடந்த வாரம் இலங்கைக்கு 3 நாள் விஜயத்தை மேற்கொண்ட அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் துணைச் செயலாளர் நாயகம் லின் பஸ்கோ இன்று செயலாளர் நாயகத்திற்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கிக் கூற இருக்கிறார்.
இதனையடுத்தே மேற்படி நிபுணர்கள் குழு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
நிபுணர்கள் குழுவில் இடம்பெறும் இந்தோனேசிய உறுப்பினர் மறுசூக்கி தருஸ்மன் ஒரு முன்னாள் சட்டமா அதிபராவார். இலங்கையில் இடம்பெற்ற 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதுவந்த குழுவின் விசாரணைகளை அவதானிப்பதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு தற்போது செயலிழந்திருக்கும் சர்வதேச சுயாதீன திறமைசாலிகள் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய தன்னார்வ நிறுவனம் ஒன்றின் 17 உதவிப்பணியாளர்கள் திருகோணமலையில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் அந்த விசாரணையில் அடங்கியிருந்தது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதம மந்திரிகளில் ஒருவரான பெனாஸிர் பூட்டோவின் மரணம் குறித்து விசாரணை செய்த குழுவிலும் இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் அங்கம் வகித்தமை குறிப்படத்தக்கது.
பெனாஸிர் படுகொலை
பெனாஸிர் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழுவின் மற்றுமொரு உறுப்பினரான ஒஸ்ரியர் பற்றிய விபரங்கள் இன்னமும் தெரியவில்லை.
செயலாளர் நாயகம் இந்த வாரம் நிபுணர்கள் குழு பற்றிய விவரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என்று பஸ்கோ கடந்த வாரம் கொழும்பில் செய்தியாளர்கள் மாநாட்டில் அறிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்குமாறு பஸ்கோ நீண்ட நாட்களாக விடுத்து வந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதை அடுத்து இங்கு வந்த பஸ்கோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
யுத்த வெற்றி கொண்டாடப்பட்ட தேசிய வைபவத்தில் 8,000 படையினரும் 700 அதிகாரிகளும் கலந்து கொண்ட அணிவகுப்பு இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாள் பஸ்கோ மேற்படி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நிபுணர்கள் குழு நியமனம் பற்றிய பஸ்கோவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அரசாங்க, எதிரணி வட்டாரங்கள் இரண்டினதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்கம் ஆகியன குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே விசாரணைக் குழு ஒன்றை நியமித்ததைச் சுட்டிக்காட்டி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு நியமனத்தை நிறுத்துவதற்கு பகீரத பிரசாரம் செய்து வந்துள்ளார்.
அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன்தானா பஸ்கோ உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொண்டார் என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். ஆனால் தம்மை இனம்காண்பிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் தகவல் தருகையில், நிபுணர்கள் குழு நியமனம் பற்றி ஐக்கியநாடுகள் அறிவிப்பு ஒன்று வெளியாகும் பட்சத்தில் அரசாங்கம் கடுமையான தொனியில் அதன் மறுப்பை தெரிவிக்கும் என்று கூறினார்.
காஸா கப்பல் மீது தாக்குதல்
கடந்த மாதம் காஸாவுக்கு மனிதநேய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற நிவாரண கப்பல்கள் மீது இஸ்ரேலின் இராணுவப் படையினர் தாக்கி 9 உதவிப் பணியாளர்களை கொலை செய்ததை அடுத்து இஸ்ரேலுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அரச பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு சமமான இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து மூனுக்கு ஆலோசனை கூறுவதற்காக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்படுவது பற்றியே தற்போது இலங்கை பான் கீ மூனுடன் முறுகல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பலத்த கண்டனங்களுக்கு உள்ளான இஸ்ரேல், இலங்கையைப் பின்பற்றி, பான் கீ மூனின் தலையீட்டை தவிர்ப்பதற்காக ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தை முந்திக் கொண்டு தனது சொந்த விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் புத்திசாலித்தனமாக இரண்டு சர்வதேச அவதானிகளை - ஒருவர் அயர்லாந்துக்காரர் மற்றவர் கனடியர் அனுமதிக்க இணங்கியது.
இவர்கள் இருவரும் எவ்விதத்திலும் விசாரணையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய அதிகாரமற்றவர்களாவர்.
பான் கீ மூன் இலங்கை தொடர்பாக நியமிக்கும் நிபுணர்கள் குழுவுக்கு ஐக்கியநாடுகள் பொதுச்சபை, பாதுகாப்பச் சபை அல்லது மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றின் அனுசரணை பெற்றுக் கொள்ளப்படாத அதேவேளை காஸா மீதான அவரது சர்வதேச விசாரணைக் குழுவுக்கு பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே இலங்கை இதனை முன்வைத்து, அணிசேரா நாடுகள் மற்றும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் அடுத்த வாரம் நிபுணர்கள் குழு நியமனத்திற்கு எதிராக தீவிர பிரசாரத்தில் இறங்கவிருக்கிறது.
இலங்கை அரசாங்கம், பான் அவருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரத்தை அப்பால் செயல்படுகிறார் என்றும் ஐக்கியநாடுகள் சாசனத்தை மீறுகிறார் என்றும் எச்சரிக்கை செய்து கடந்த வாரம் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தது.
ஆனால், பான் கீ மூன் தெற்காசிய நாடொன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் மத்தியில் ஊகங்கள் நிலவுவதாக தெரியவருகிறது.
எதிர்பார்க்கப்படுவது போல, அடுத்த வாரம் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டால், அடுத்த வருட முடிவில் இரண்டாவது பதவிக் காலத்திற்காக போட்டியிடவிருக்கும் பான் கீ மூனை அரசியல் ரீதியில் கடும் நெருக்கடிக்கு உட்படுத்த அணிசேரா நாடுகளின் ஆதரவு கிடைக்குமென இலங்கை எதிர்பார்க்கிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’