தனங்கிளப்பு சுண்டிக்குளம் பிள்ளையார் ஆலய வீதியில் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
தனங்கிளப்பைச் சேர்ந்தவர்களான தற்போது பண்டத்தரிப்பில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான கனகசபை பிரகாஷ் (வயது-29) சாவகச்சேரியில் வசித்து வரும் மந்திகை வைத்தியசாலையில் ஊழியராகப் பணிபுரியும் இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் பொன்சேகர் (வயது-38) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது தனங்கிளப்புப் பகுதியில் மீளக்குடியமர்ந்த பகுதியில் மக்களின் நலனோன்புகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை சுண்டிக்குளம் பிள்ளையார் ஆலயச் சூழலில் நடைபெறவிருந்தது.
இதனையடுத்து அப் பகுதி மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபட்டனர். துப்பரவு செய்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஓரிடத்தில் குவித்து எரித்தபோது பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதன்போது பிரகாஷ் என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவரினதும் உடல்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தின் போது நால்வர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் அதேயிடத்தைச் சேர்ந்த தேவதாஸ் விவேகானந்தம் (வயது-52) விஜயரட்ணம் (வயது-63) ஐயம்பிள்ளை வன்னியசிங்கம் ஆகிய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விஜயரட்ணம் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’