நவநீதம் பிள்ளை |
இலங்கையில் நடந்து முடிந்த போர் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணையே சிறப்பான பலனைத்தரும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
அப்படியான ஒரு விசாரணையின் மூலமே நீதியும், நீண்டகால நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 14வது அமர்வில் திங்களன்று உரையாற்றிய நவநீதம் பிள்ளை அவர்கள், உலகளவில் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் அங்கு சமர்ப்பித்தார்.
உலக மட்டத்தில் பல நாடுகளில் காணப்படும் அடக்குமுறைகள், அநீதிகள், புறக்கணிப்புக்கள் மற்றும் வன்செயல்கள் குறித்து இந்த அறிக்கையில் அவர் கோடிகாட்டியிருக்கிறார்.
குறிப்பாக உலக மட்டத்தில் பெண்கள் பக்கசார்பாக நடத்தப்படுதல், வறுமை போன்ற நிலைமைகளில் அவதியுறல் போன்ற விடயங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை நிலவரங்களை பொறுத்தவரை சர்வதேச மட்டத்திலான சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ள நவநீதம் பிள்ளை அவர்கள், அதில் முதலாவதாக இலங்கை நிலவரம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது அங்கு நிகழ்ந்ததாக கூறப்படும் நிகழ்வுகள் பற்றி மனித உரிமைக் கவுன்ஸிலில் விவாதிக்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் தான் உறுதி வழங்கிய கடப்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீளக்குடியமர்தலில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவசர உதவிகளின் மூலம் பாதியளவு ஆசுவாசம் கிடைத்தது என்றும் கூறியுள்ள நவநீதம் பிள்ளை அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், பரிகாரம் கிடைக்கவும், அத்துடன் குற்றங்களுக்கு காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்படவும், நீண்ட கால அடிப்படையிலான நல்லிணக்கத்துக்கும் உறுதியான நடவடிக்கைகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்காலத்தில் நிகழ்ந்த சில விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள, '' படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழு'' குறித்து குறிப்பிட்டுள்ள நவநீதம் பிள்ளை அவர்கள், இருந்தபோதிலும், முந்தைய அனுபவங்கள் மற்றும் புதிய தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கின்றபோது, இந்த விடயம் குறித்து விசாரிக்க ஒரு சர்வதேச சுயாதீன ஏற்பாடே சிறப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சர்வதேச ஏற்பாட்டுக்கே, இலங்கையிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் மக்களின் நம்பிக்கை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து நிலைமைகள் குறித்துக் கூறியுள்ள அவர், அங்கு ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கடந்த வாரத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வகைதொகையற்ற தாக்குதல்களை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது போன்று ஆப்பிரிக்க உட்பட உலகின் பல நாடுகளில் காணப்படும் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அந்த அறிக்கையில் அவர் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’