வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜூன், 2010

ச‌ட்டீஸ்கரில் நக்ஸல் தாக்குத‌‌‌ல் : 30 ரிசர்வ் போலீசார் பலி

நக்சலைட் தீவிரவாதிகள் சட்டீஸ்கரில் நேற்று மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 30 வீரர்கள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பஸ்தர் பகுதியில் நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் நடந்தது. மலைப் பாதையில் தடைகளை அகற்றிய மத்திய போலீசாரை மலைப் பகுதியில் சுற்றி நின்று இந்த பயங்கர தாக்குதலை நடத்தினர். சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நக்சலைட் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 6ம் தேதி தண்டேவடா மாவட்டத்தில் நடத்திய திடீர் தாக்குதலில் 75 மத்திய ரிசர்வ் படை போலீசார் (சி.ஆர்.பி.எப்.) பலியான செய்தி நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது. இதன் பிறகு இதே மாநிலத்தில் உள்ள பிஜப்பூரில் நக்சலைட்கள் வைத்த கண்ணி வெடியில் மத்திய போலீசார் சென்ற வாகனம் சிக்கி 8 வீரர்கள் உயிர் இழந்தனர்.
இந்நிலையில் நேற்று சட்டீஸ்கரில் நாராயண்பூர் மாவட்டம் பஸ்தர் காட்டுப் பகுதியில் துராய் போலீஸ் நிலைய வரம்புக்கு உட்பட்ட இடத்தில் சாலையில் நக்சலைட்கள் தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். இந்த தடைகளை 70 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பிற்பகலில் அகற்றி விட்டு அருகில் உள்ள முகாமுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது மலை உச்சியில் 90 நக்சலைட் இயக்க தீவிரவாதிகள் சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர். இதில் சி.ஆர்.பி.எப். படையைச் சேர்ந்த 30 வீரர்கள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன. காயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் நிலைமை மோசமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் நக்சலைட்களுக்கு எதிராக துணை ராணுவம் எடுக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று முதல் 2 நாள் பந்த் நடத்த நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதையொட்டி, இந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்தை தடை செய்ய சாலைகளில் நக்சலைட்கள் பாறாங்கற்களை போட்டு தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். இந்த தடைகளை அகற்றி விட்டு வந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக டெல்லியில் சி.ஆர்.பி.எப். தலைவர் விக்ரம் ஸ்ரீவத்சவா கூறினார்.
தண்டேவடா சம்பவத்துக்குப் பிறகு நக்சலைட்களை எதிர்த்து போரிட ராணுவத்தை களத்தில் இறக்குவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்தது. ஆனால், இன்னும் முடிவு எடுக்கவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’