சகோதர இனத்தவர்களால் யாழ் நூலகத்திற்கு வழங்கப்படுகின்ற உயரிய தரத்திலான பல்துறை சார்ந்த நூல்கள் எமது சமுதாயத்தின் எதிர்கால நலனுக்குப் பயனுள்ளதாக அமையுமென்றும் இதன் மூலம் இரு இனங்களுக்கிடையிலான உறவுப்பாலம் வலுப்பெறும் என்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இன்று முற்பகல் 11 மணிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சி சார்பில் ஓமல்பே சோபித தேரர், மகரகம மகிந்த தேரர் நிவித்திகல விபஸ்தி தேரர் ஆகியோரால் சுமார் 30இலட்சம் ரூபா மதிப்புள்ள ஆங்கில மொழி நூல்களைக் கையளிக்கும் நிகழ்வு யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஓமல்லே சோபித தேரர் நல்ல நூல்களின் மூலம் சிறந்ததொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதால் யாழ் குடாநாட்டு மக்களின் அறிவுப்பசியைத் தீர்க்கும் வகையிலும் இந்நூல்கள் கையளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க இங்கு உரையாற்றும் போது ஆசியாவின் மிகச் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் நூலகம் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தீமூட்டி அழிக்கப்பட்டு இன்று மீண்டும் நூலகம் கட்டியெழுப்பப்படுகின்ற நிலையில் இதன் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அனைவரும் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாடலி சம்பிக்க ரணவக்க ஆகியோராலும் தேரர்களாலும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் முருகேசு சந்திரகுமார் அவர்களாலும் நூல்கள் யாழ் மாநகர சபை முதல்வர் பிரதி முதல்வர் நூலகர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’