விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், தமிழக அரசின் பாதுகாப்பில் தமிழக அரசு குறிப்பிடும் மருத்துவமனையில், தமிழக அரசின் செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவரிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது குறித்து சுட்டிக்காட்டி, அது என்ன நிபந்தனை என்று கேட்டபோது முதல்வர் இதைத் தெரிவித்தார். முன்னதாக, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் தமிழகத்தில் தங்கி இருந்து சிகிச்சை பெற அனுமதிக்குமாறு கோரி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருப்பதாக துணை முதல்வர் ஸ்டாலின் திங்களன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மலேசியாவில் இருந்து சிகிச்சைபெறவென உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதியம்மாள் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி குடிவரவுத்துறை அதிகாரிகளால் திருப்பி அனுப்பட்டதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் நடந்த விவாதம், முதல்வர் கருணாநிதியின் விளக்கம், பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பு அனைத்தையும் நினைவுகூர்ந்த ஸ்டாலின், பார்வதியம்மாள் பெருவிரல் ரேகை பதித்த கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
அதில் தனது வைத்திய வசதிக்காக கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்து தரும்படி தமிழக முதலமைச்சர் கருணாநிதியை அவர் வேண்டியிருந்ததாகவும், கடந்த 30ஆம் தேதி முதலமைச்சரின் தனிப்பிரிவில் இயங்கும் கணிப்பொறியியல் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்ட, அக்கடிதம் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு இணங்க பார்வதியம்மாள் அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளபடி மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு அவர் வந்து செல்ல சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆராய்ந்து அனுமதி அளிக்கலாம் என்ற பரிந்துரை கடிதம் மத்திய உள்துறை செயலருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’