அவசரகால சட்டத்தின் பெருமளவு விதிகளை அகற்ற அரசாங்கம் முன்வந்துள்ளது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பான விசேட விவாதம் (இன்று) செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான பிரேரணையைப் பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்வைக்கவுள்ளதுடன் திருத்தங்கள் குறித்து சபையில் நான் விபரங்களை வெளியிடுவேன்" என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.எந்தவிதமான அழுத்தங்கள் காரணமாகவும் நாம் அவசரகால சட்டத்தில் தளர்வுகளை மேற்கொள்ளவில்லை. மாறாக எமது நாட்டின் நலன்கருதி இந்த செயற்பாட்டை மேற்கொள்கின்றோம். சரியான செயற்பாடுகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது :
"கடந்த ஐந்து வருடங்களாக அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தது. அதனை நாடாளுமன்றம் ஊடாக மாதா மாதம் நாங்கள் நீடித்து வந்தோம். எக்காரணம் கொண்டும் அதனை நீக்க முடியாத நிலைமையில் அரசாங்கம் இருந்தது. அன்றைய சூழல் அவ்வாறு காணப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமைகள் மாறிவிட்டன. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டில் அமைதி நிலைமை காணப்படுகின்றது. சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்துவருகின்றது. முதலீடுகள் அதிகரிக்கின்றன. அபிவிருத்தியை நோக்கி நாங்கள் பயணிக்கின்றோம்.
அப்படிப் பார்க்கும்போது ஒரு புதிய யுகத்தில் காலடி வைப்பதுடன் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கின்றோம். இந்நிலையில் தற்போதைய நிலைமையில் அவசரகால சட்ட விதிகளில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அதாவது அவசரகால சட்டத்தின் அதிகளவிலான விதிகளை நீக்கும் இடத்துக்கு தற்போது நாங்கள் வந்துவிட்டோம். ஒரு வருடத்துக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையில் இதனை செய்திருக்க முடியாது. ஆனால் தற்போது இதனை எம்மால் செய்ய முடியும்.
அன்று காணப்பட்ட அச்சுறுத்தல் இன்று இல்லை. முக்கியமாக சரியான நேரத்தில் சரியானதைச் செய்யவேண்டும் என்று நம்புகின்றோம். அதனைத்தான் செய்கின்றோம்.
செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறும். பிரதமர் டி.எம். ஜயரட்ன நாடாளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பான பிரேரணையை முன்வைப்பார்.
வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் திருத்தங்கள் தொடர்பான விபரங்களை நான் வெளியிடுவேன். இரண்டு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அனைத்து மட்டங்களிலும் சரியான மதிப்பீடுகளை செய்த பின்னரே இந்த வரலாற்று முக்கியத்துவமான தீர்மானத்துக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வந்துள்ளது.
அதாவது அவசரகால சட்டத்தில் தேவையற்ற விதிகள் அனைத்தையும் உடனடியாக நீக்கிவிடவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கின்றார். தற்போதைய நிலைமையில் தேவையற்ற விதிகள் நீக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி கருதுகின்றார். இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் எந்தவொரு சக்தியினதும் அழுத்தம் காரணமாக நாங்கள் இந்த நடவடிக்கைகளையும் தளர்வுப் போக்கையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக எமது நாட்டின் நலன்கருதி நாங்கள் மேற்கொண்ட மதிப்பீட்டின் பிரகாரம் இதனை செய்கின்றோம். சாதாரண சட்டதிட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றே தீர்மானித்தோம்."
இவ்வாறு அமைச்சர் கூறினார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’