விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறார் போராளிகள் |
இலங்கையில் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டிருந்த சிறார்கள் விடுவிக்கப்படுவதில் கடந்த ஆண்டு முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்துவரும் ஆயுத மோதல்களால் அங்குள்ள சிறார்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்த வருடாந்த அறிக்கை ஒன்றை ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஐ.நா.வின் பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடம் சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் சென்ற வருடம் முடிந்த ஆயுத மோதல்களால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் குறித்த தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஆயுத மோதல்களில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படும் இடமாக, சிறார்கள் வலுக்கட்டாயத்தின் பேரில் ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டுவந்த ஒரு இடமாக இலங்கை இருந்துவந்த ஒரு பின்னணியில் இங்கு சிறார்கள் ஆயுதக் குழுவில் இடம்பெறுவதைத் தடுக்க ஐ.நா. கடந்த வருடம் ஒரு செயல்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
டி.எம்.வி.பி. நிலவரத்தில் முன்னேற்றம்
அந்த செயல்திட்டத்தின் கீழ் 2009ல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறார்கள் புதிதாக சேர்க்கப்படுவது நின்றுள்ளதாகவும், ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரான கருணா என்றழைக்கப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் பெயரும், இந்த அமைப்பின் இந்நாள் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயரும், சிறார்களைப் படையில் சேர்ப்பவர்கள் பட்டியலில் இருந்து இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் கருணாவுடன் தொடர்புடையவரான இனியபாரதியின் பெயர் இந்த வருடப் பட்டியலில் உள்ளது.
அரச படை நடவடிக்கைகள் மீது விமர்சனம்
2009 ஆண்டின் முதல் ஐந்து மாத காலகட்டத்தில் போர் உக்கிரமாக நடந்த சமயம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டுமாக சிறார்கள் சுமார் 200 பேர் கொல்லப்பட்டும், சுமார் 150 பேர் அங்க அவயங்களை இழந்தும் இருந்ததாக தங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என்று ஐ.நா. கூறுகிறது.
உண்மையில் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை இதற்கும் அதிகமாக இருக்கும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இவ்வாறு சிறார்கள் கொல்லப்பட பெருமளவு காரணம் அரச படைகளின் ஷெல் தாக்குதல்கள் என்று உயிர்தப்பியவர்களிடம் தாங்கள் நடத்திய விசாரணை மூலம் தெரியவருவதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
தவிர விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் பாலியல் வல்லுறவுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியிருந்ததாக இடம்பெயர்ந்த மக்களிடம் தாங்கள் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
'விடுதலைப் புலிகள் தந்த துன்பம்'
விடுதலைப் புலிகளும்கூட தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிக்க பெண்கள் அஞ்சவேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக அவர்களின் கூந்தலை வெட்டியிருந்தார்கள்; குட்டையான தலைமுடியுள்ள பெண்களைக் கண்டால் விடுதலைப் புலிப் போராளிகள் என்று இலங்கை இராணுவம் சந்தேகிப்பார்கள் என்பதை அறிந்து அவர்கள் இப்படிச் செய்தார்கள் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இளம் பெண்களை தமது இயக்கத்தில் சேர்க்கலாம் என்பதற்கு அஞ்சி, சில பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் அவசர அவசரமாக மணம் முடித்துவைத்த சம்பவங்களும் நடந்திருந்தன என்று இந்த அறிக்கை கூறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’