நிவாரணக் கிராமங்களுக்குச் செல்வதற்கு, நடைமுறைக்கேற்ப பாதுகாப்புத் தரப்பில் அனுமதி பெற்றால், எவ்வித சிரமமுமின்றி எவரும் முகாமுக்குச் செல்ல முடியும். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறையாக முன் அனுமதி பெறாததன் காரணமாகவே செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களுக்குச் செல்வதற்கு அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் என அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
அச்செய்தியில்,
பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன் அனுமதியை பெற்றுக்கொள்வார்களாயின் அவர்கள் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான அனுமதியை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. 
அவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் நிவாரணக் கிராமங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். 
கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த அவர்கள் அங்கிருந்து ஒட்டுசுட்டான், தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு போன்ற பகுதி களுக்கும் சென்றனர்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குச் சென்றிருந்த அவர்கள், அங்கே மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிநதனர்.
அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றபோது, அதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்ட தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’