வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 25 மே, 2010

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க மதிப்பீட்டுத் திட்டம் : ஜனாதிபதி பணிப்பு


நாட்டில் நிலவிய மிகமோசமான காலநிலையை அடுத்து ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் நஷ்டஈடு வழங்குவதற்குத் தேவையான மதிப்பீட்டுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாவட்ட செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு போதுமான அளவு நிதியை வழங்குமாறும் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் பொருட்சேதங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு போதுமான அளவு நிதியை மாவட்ட செயலாளர்கள் வழங்கவேண்டும்.
அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான குறுகிய மட்டும் நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் அதற்கான திட்டங்களைத் தயாரித்து, அவற்றை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக சில மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெய்த அடைமழையினால் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 93,955 குடும்பங்களை சேர்ந்த ஆறு லட்சத்து 7 ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பிரதேச செயலாளர்களின் மூலமாக உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு திட்டமிட்டதன் பிரகாரம் இதுவரையிலும் 10 லட்சத்திற்கு மேலதிகமான நிதி அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் அப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபா நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு விசேட குழுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்த வீட்டுக்கு 50 ஆயிரம் ரூபாவையும் பகுதியளவில் சேதமடைந்த வீட்டுக்கு 20 ஆயிரம் ரூபாவையும் நட்டஈடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 615 பேர் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதி வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் என மேலதிகமாக 25 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’