தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்கள் நல்ல சேவை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
தமிழக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிவரும் மருத்துவ சேவைகளை பாராட்டியுள்ள உலக வங்கி, இச்சேவைகளின் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக கூடுதல் நிதியுதவி வழங்கவுள்ளது என எமது செனெனை செய்தியாளர் டி.என்.கோபாலன் கூறுகிறார்.
இந்தியாவில் மகப்பேறு மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பொதுவாக தமிழகம் முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.அகில இந்திய கிராமப்புற நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் சிறப்பாகப் பணியாற்றியதற்காக தமிழ்நாட்டுக்கு விருதும் கிடைத்திருக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ்கள் இப்படியெல்லாம் வசதிகள் செய்ததன் விளைவாக மிக அதிகமான அளவில் கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலயங்களுக்கு வரத் துவங்கியிருக்கின்றனர் என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
உலக வங்கியைச் சேர்ந்த பொது சுகாதாரத்துறை நிபுணர் ப்ரீதி குடீசியா தமிழகத்தின் சேவைகளைப் பாராட்டியுள்ளார்.
அவசரத் தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் வசதி இருப்பது குறிப்பிடத்தகுந்த ஒரு முன்னேற்றம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் மற்றும் தாய்மாரின் இறப்பு விகிதங்கள் குறைந்திருக்கிறது. முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உலக வங்கி 117 மில்லியன் டாலர் உதவி அளிக்கவுள்ளது. |
தமிழகத்தில் ஆரம்ப சுகாதாரத் தேவைகளுக்காக போதுமான நிதி ஒதுக்கப்படுவதாகவும், கிராமப்புற மருத்துவமனைகளில் உள்ள வசதிகளால் ஈர்க்கப்பட்டு பல பெண்கள் மகப்பேற்றிற்காக அங்கே வருவதாகவும், மருத்துவர் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் தமிழக அரசின் நல்வாழ்வுத்துறை செயலர் சுப்புராஜ் கூறுகிறார்.
அதேநேரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கமுடியாத அளவு சிக்கலாகி அருகிலுள்ள் இரண்டாம் கட்ட சிறுநகர், பெருநகர் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்போது, அங்கே போதுமான சிகிச்சை நிபுணர்கள் இருப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்படியான வசதிகளை மேம்படுத்த தனியாருடன் கூட்டு சேரப்போவதாகச் சொல்லி இறுதியில் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நிலை உருவாகக்கூடும் எனவும் சிலர் அஞ்சுகின்றனர்.
ஆனால் நிபுணர்கள் பற்றாக்குறை பெரிதாக எதுவும் இல்லை, அரசுப் பணிக்கு பல மருத்துவர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர், எவ்வித மேம்பாடும் அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையிலேயே அமையும் என தமிழக அரசுச் செயலர் சுப்புராஜ் வாதிடுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’