வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் கைகொடுக்க வேண்டும்


இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கைகொடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.
கடந்த கால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அத்தகைய துன்பங்களை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்கள் இராஜதந்திரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுச் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் விசேட வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் உரைநிகழ்த்துகையில் உங்களில் பலர் நீண்ட காலமாக இலங்கையில் சேவை செய்தவர்கள். இதற்கு முன் நான் உங்களை நாட்டில் பாரிய பகுதியொன்று புலிகளின் அதிகாரத்திலிருந்த போதே சந்தித்திருக்கிறேன்.
அன்று போலவே இன்றும் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்தை எமது அரசாங்கம் மதிக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேறு வழியில்லாத சந்தர்ப்பத்திலேயே சகல இன மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது.

புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நாம் பல முறை முயற்சித்துள்ளோம். நான் முதல் தடவை ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலிகளின் தலைவரைச் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.
ஜெனீவா மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் நாம் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். அதற்காக நாம் உயர் மட்டப் பிரதிநிதிகளை அனுப்பினோம். எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
உலகில் மிக மோசமான பயங்கரவாதக் குழுவுடன் நாம் யுத்தம் புரிந்த போதும் நாம் முழுமையான ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதில் மிகக் கவனமாக செயற்பட்டதைப் பெருமையுடன் கூற முடியும். புலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இடம்பெயர்ந்த 2 60 000 மக்களில் 70 சதவீதமானோரை நாம் இந்த குறுகிய காலத்தில் மீள்குடியமர்த்தியுள்ளோம்.
அவசரக் கால சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம். அதில் பல சரத்துக்களை நீக்கியுள்ளோம். இதனை மிகவும் கவனமாகவே மேற்கொண்டோம். புலிகளின் ஆயுதங்கள் இப்போதும் பெருந்தொகையாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நாடு கடந்த அரசசொன்றை நிறுவுவதற்காக புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான தேர்தலொன்றை நடத்தவும் முயற்சித்தனர்.
இது போன்று வெளிநாடுகளில் இடம்பெறும் சூழ்ச்சிகளை நேரடியாக எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் அவசரகால சட்டத்தை மேலும் தொடர முடிவெடுத்தோம். பயங்கரவாதத்தினால் பல உலக நாடுகள் பேரழிவுகளைச் சந்தித்துள்ளமையை நாம் அறிவோம். பல இலட்சக்கணக்கான மக்கள் இதனால் இடம்பெயரவும் நேர்ந்துள்ளது. இதனால் எமது தேசிய பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
முரண்பாடான தவறான கருத்துக்கள் பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இலங்கை மீண்டும் முகங்கொடுக்க நேரிடுமோ என்பதில் அரசாங்கம் மிக கவனமாகச் செயற்படுகிறது. அதனால் நாட்டின் பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’