யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும் படியும் அவரது கணவர் திரு பற்குணராஜா அவர்களை கைது செய்யுமாறு நீதவான் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் சில திட்டமிட்ட வகையில் அவதூறுகளை பரப்பியிருந்தன.
யாழ் மாநகர பிரதி முதல்வர் றீகன் அவர்களின் கைது குறித்து வெளியான விளம்பரங்கள் விடயமாக நீதவான் அவர்கள் மாநகர முதல்வர் அவர்களை கௌரவமான முறையில் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த விளம்பரம் குறித்த விடயங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் யாழ் மாநகர முதல்வர் அவர்கள் தனது கணவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றிருந்தார் என்பதே உண்மையாகும். இந்நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த யாழ் மாநகர முதல்வர் அவர்களை பகிரங்கமாக விசாரணை நடத்துவதைத் தவிர்த்து மக்கள் பிரதிநிதி என்ற சிறப்புரிமையின் அடிப்படையில் நீதவான் அவர்கள் தனது சமாதான அறையில் பிரத்தியேகமாக வைத்து ஊடகங்களில் வெளியான விளம்பரங்கள் குறித்த உண்மைகளை கேட்டறிந்து கொண்டார். யாழ் முதல்வர் சார்பாக சட்டத்தரணி சாந்தா அபிமன்சிங்கம் அவர்கள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இதேவேளை அங்கு பிரசன்னமாகியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ந்த சட்டத்தரணி றெமீடியஸ் அவர்கள் அவசியமற்ற முறையில் பிரச்சினைகளைத் தூண்டக்கூடியவாறு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஊடகங்களில் வெளியான விளம்பரங்கள் குறித்து நீதவான் அவர்கள் முன்பாக விளக்கம் அளித்த முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஐh அவர்கள் நீதிமன்றை அவமதிக்கும் நோக்கில் குறித்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்றும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டு செயற்படுவதை தாம் கடைப்பிடித்து வருவதாகவும், தொடர்ந்தும் நீதித்துறைக்கு மரியாதை செலுத்தியே தமது சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதை அடுத்து யாழ் மாநகரசபை நிர்வாகத்தின் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் கௌரவ நீதவான் திரு ஆனந்தராஐh அவர்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்களின் செயற்பாடு குறித்த அதிருப்தியை தெரிவித்திருந்ததோடு அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.
மக்களால் தெரிவு செய்பட்ட ஒரு பெண்மணி என்றும் பாராமல் அவரது சேவைகளை பாராட்டுவதற்கு மாறாக அவர் மீதான அவதூறுகளை பரப்ப வேண்டாம் என்றும், இது நீதித்துறைக்கும் மாநகரசபைக்கும் இடையிலான பிரச்சினை என்பது போன்ற தோற்றப்பாட்டை ஊடகங்கள் உருவாக்க முனைவது குற்றம் என்றும் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது கொச்சைத்தமிழில் செய்தி வெளியிடுவதை தவிர்த்து நேர்த்தியாக எழுதவேண்டும் என்ற அறிவுரையினையும் நீதவான் அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.
மேலும் இது குறித்து எமது செய்தியாளர் தெரிவிக்கையில் யாழ் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஐh அவர்களை கைது செய்வதன் மூலம் யாழ் மாநகரசபையின் சேவைகளை முடக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், அதற்கான பொறுப்பை அடுத்தடுத்து நடந்த தேர்தல்களின் போது தோல்வியை தழுவிக்கொண்ட கூட்டமைப்பு சட்டத்தரணி றெமீடியஸ் அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் யாழ் மக்கள் அவர் மீது விசனம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை நீதித்துறையை தவறாக வழிநடத்தி மாநகரசபையின் முதல் மரியாதைக்குரிய பெண்மணியை அவமதிக்க றெமீடியஸ் நினைப்பது வெறும் கனவு என்றும் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத யாழ் சட்டத்தரணி ஒருவர் இன்று நீதிமன்ற முன்நிலையில் வைத்து எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.
மாநகர முதல்வரது கணவர் திரு பற்குணராஜா அவர்கள் உலக நாகரீகங்களை கற்றுக்கொண்ட ஒரு கௌரவமான அமைதியான மனிதர் என்றும் பிரதி முதல்வர் றீகன் அவர்களின் விடுதலை குறித்து நடந்த யாழ் மாநகரசபையின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் போது ஊழியர்களை திரு பற்குணராஜா அவர்கள் பலாத்காரப்படுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுத்தியிருந்தார் என்றும் ஊடகங்கள் சில விசமத்தனமாக செய்தி வெளியிட்டிருந்தமை குறித்து நீதவான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் அந்த சட்டத்தரணி மேலும் தெரிவித்திருந்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’