வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

''பன்னாட்டு விசாரணை தேவை



 

மோதலில் கொல்லப்பட்டவர்கள்
மோதலில் கொல்லப்பட்டவர்கள்
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் போது நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றி இலங்கை அரசு உண்மையான ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாததால், அது குறித்து ஒரு பன்னாட்டு விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு, இண்டர்னேஷனல் க்ரைசிஸ் குரூப், என்ற அமைப்பு கோரியிருக்கிறது.
போர் நடந்து முடிந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில், இன்று திங்களன்று, இந்த அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி ஐந்து மாத கால கட்டத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள் முதியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான சாதாரண தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருக்கிறது.
போர் தொடர்பான சர்வதேச சட்டங்கள் இலங்கை அரசாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தாலும் மீறப்பட்டதாகக் கூறும் இந்த அறிக்கை, பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் அனுபவித்த துயரங்களின் அளவு ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது இதற்கு தக்க ஒரு பதில் தரப்படவேண்டும் என்று இந்தக் குழுவின் தலைவரும் முன்னாள் ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியிருக்கிறார்.
மோதலில் காயமடைந்த மக்கள்
மோதலில் காயமடைந்த மக்கள்
அரசு மற்றும் புலிகள் ஆகிய இரு தரப்பினருமே பல ஆண்டுகளாக நடந்த இந்த மோதலில் சர்வதேச மனித நேய சட்டங்களை மீறியிருந்தாலும், போரின் இறுதி மாதங்களில் இந்த மீறல்கள் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன, மேலும் மீறல்களின் தன்மை மிகவும் ஆபத்தானவையாக இருந்தது என்று அது கூறுகிறது.
அரச படையினர், மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சர்வதேச சட்டத்தை மீறி, சிவிலியன்களை தாக்குவது, மருத்துவமனைகளைத் தாக்குவது மற்றும் மனித நேய நடவடிக்கைகள் நடக்கும் இடங்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்த குழு கூறுகிறது.
குறிப்பாக ''நோ பையர் சோன்'' எனப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீதே, மீண்டும் மீண்டும் நடந்த தாக்குதல்கள் குறித்து இந்த அமைப்பு சேகரித்துள்ள சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த குற்றங்கள் இலங்கை பாதுகாப்புப் படைகளில் இருக்கும் குறிப்பிட்ட சில தனி நபர்களால் இழைக்கப்பட்டன என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன என்று அந்தக் குழு கூறுகிறது.
இந்தப் பகுதிகளில் கனரக குண்டு தாக்குதலை அரச படைகள் நடத்துவதற்கு, விடுதலைப்புலிகள் தூண்டினர் என்று கருதுவதற்கு இடமில்லை என்று கூறும் இந்த அறிக்கை, விடுதலைப்புலிகள் இந்த இலக்குகளுக்கு மிக நெருக்கமாக இருந்ததாலும், அந்த இலக்குகளுக்குள்ளேயே அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாலும், அவர்கள் இந்தக் கனரக குண்டுத் தாக்குதல்களைத் தூண்டியிருப்பார்கள் என்று கருத முடியவில்லை என்று கூறியிருக்கிறது.
''மேலும் இந்த பொதுமக்களை இந்த தாக்குதல்களற்ற பகுதிகளுக்கு செல்லுமாறு கட்டளையிட்டதே அரசுதான், அரசுக்கு அவர்கள் இருந்த இடங்கள் தெரியும், இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் சிவிலியன்கள் என்று தெரியும், அவர்களுக்கு ஐ.நா அலுவலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களும் வந்துகொண்டிருந்தன, செய்கோள் படங்கள் அரசிடம் இருந்தன, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் பல மாதங்களாகவே தொடர்ந்து சிவிலியன்கள் மீது ஷெல்லடித்தாக்குதல்களை நடத்துகிறீர்கள் என்று பல முறை சொல்லப்பட்டும், படையினர் தொடர்ந்து அதே பாணியில் தாக்குதல்களை நடத்தி, சிவிலியன்கள் தாக்கப்படவில்லை என்று கூறி வந்தனர்'' என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இடம்பெயர் முகாம்களில் மக்கள்
இடம்பெயர் முகாம்களில் மக்கள்
இந்த சம்பவங்களுக்கு பொறுப்பான இந்த தனி நபர்களின் நடத்தை விசாரிக்கப்படவேண்டும் என்று கூறும் இந்த அமைப்பு, மேலும், தாக்குதல்களுக்கு உள்ளான மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் மனித நேய நடவடிக்கைகள் நடந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், போன்றவை, மானுட குலத்துக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டு அதற்கு யாரும் தனி நபர்கள் பொறுப்பா போன்ற கேள்விகளும் எழுவதாகக் கூறுகிறது.
இது குறித்த குற்றச்சாட்டுகள் மீது அரசின் கருத்தைப் பெற ஐ.சி.ஜி முயன்றும் அரசு பதிலளிக்கவில்லை என்று குழு கூறுகிறது
விடுதலைப்புலிகளும் போர்ப் பகுதியிலிருந்து தப்பி வெளியேற முயன்ற பொதுமக்களை தடுத்து, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களைக் கொன்று அல்லது காயப்படுத்தியதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறார்கள் என்று இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
சர்வதேச சமூகத்தில் பெரும்பகுதி நாடுகள், இந்த போர் நடந்து கொண்டிருந்த போது, நடைபெற்ற மீறல்களைக் கண்டும் காணாமல் இருந்தன என்று கூறும் இந்த அமைப்பு, பல நாடுகள், போரின் போது, போர் குறித்த சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது மற்றும் அதன் காரணமாக எழுந்த பெரும் மானுடத்துயரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரவேற்றன என்றும் கூறுகிறது.
(இதன் முழுமையான வடிவத்தை மேலே ஒலி வடிவில் கேட்கலாம்.)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’