தனது மோசடிகள் அம்பலத்திற்கு வருவதைத் தடுப்பதற்காகவும் அவை பற்றிய மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் உதயன் சரவணபவன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார்.
உதயன் பத்திரிகையின் நிர்வாகியான ஈ. சரவணபவன் அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஒரு பக்க சார்பாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த அந்தப் பத்திரிகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுப் பத்திரிகையாக செயற்பட்டு வருவதையே அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த காலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரித்து அதன் பின்னால் மறைந்து கொண்டிருந்ததால் செய்வதறியாது இருந்த மக்கள் சரவணபவன் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவானதும் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பி தற்போது அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் எங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு உதவிகளை நாடி வருகின்றனர். இதனை அறிந்த சரவணபவன் கையாலாகத நிலையில் அதனை மறைப்பதற்காக எமது கட்சி மீது தொடர்ந்து சேறடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
1985 களின் நடுப்பகுதியில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பிய சரவணபவன் அவர்கள் ஷப்றா (ஷப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டட்) என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார். இந் நிதிக்கம்பனியினர் மக்களின் பணத்தை கவர்ந்திழுக்க மக்களை மயக்கும் விளம்பரங்களை மிகவும் கபடத்தனமாக மேற்கொண்டனர். மக்களை ஏமாற்றி பணம்பறிக்க கவர்ச்சிகரமான வட்டிகளை அறிவித்து மக்களைக் கவர்ந்திழுத்தனர். ஏராளமான மக்கள் பெருந் தொகைப்பணத்தை அதாவது ஒவ்வொரு நபரும் பல லட்சம் ரூபாவை ஒரு தமிழனின் வங்கி என நம்பி வைப்பிலிட்டனர். பல ஓய்வு பெற்ற அரசதுறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்கள் தமது ஓய்வூதியப்பணம் முழுவதையும் நம்பிக்கையுடன் வைப்பிலிட்டனர். பல பெண்கள் தாம் தமது எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமாக சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தையும் அதிக வட்டிகளை பெற்று மேலும் பணம் சேமிக்கலாம் என்ற கற்பனையில் சப்றா நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டனர். வேண்டியளவு பணம் மக்களால் வைப்பில் இடப்பட்ட பின்னர் திடீரென சப்றா நிதிநிறுவனம் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போனது. ஏழைத் தமிழ் மக்களின் பணமான சுமார் 60 கோடி ரூபா பணம் முழுவதையும் சரவணபவன் சுருட்டிக் கொண்டார். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சம்பாதித்த பணம் முழுவதும் சூறையாடப்பட்டது. தமது வாழ்வாதாரமாக வைத்திருந்த பல லட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டிருந்த பல பெண்களின் வாழ்க்கையில் மண் விழுந்தது. அப்பெண்களில் பலர் திருமணம் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு இன்னமும் வாழ்க்கையில் விரக்தியுற்று யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். பலர் பல லட்சம் ரூபா பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை கூட செய்திருந்தார்கள்.
இவ்வாறு பல கோடி ரூபாக்களை இழந்த மக்கள் தற்போது சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அதாவது அவர் வெளியுலக வாழ்க்கையில் காலடிவைத்துள்ள நிலையில், கடந்த காலங்களைப் போல் பயங்கரவாத அசாதாரண சூழ்நிலை இல்லாத ஒரு ஜனாநாயக சூழ்நிலை தற்போது தோன்றியிருக்கும் நிலையில் அவரிடமிருந்து தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக திரண்டுவருவதையும் அதற்கு உதவுமாறு எமது கட்சியிடம் கோரிக்கை முன்வைப்பதையும் அறிந்து கொண்டுள்ள சரணவனபவன் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மழுங்கடிக்கச் செய்வதற்காகவும் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் எமது கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகின்றார்.
ஒருபக்கம் தனது மோசடியை மறைப்பதற்கும் மறுபுறத்தில் தான் சார்ந்த அரசியல் கட்சியில் தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்திக்கொள்வதற்காகவும் எம்மீது சேறடிக்கும் நடவடிக்கையை உதயன் பத்திரிகை மூலம் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றார்.
ஒருகாலத்தில் தமிழரசுக்கட்சியின் உத்தியோகப+ர்வ பத்திரிகையாக இருந்த சுதந்திரன் பத்திரிகை கூட தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டதில்லை. ஆனால் இன்று உதயன் பத்திரிகை எந்தவித பத்திரிகை தர்மமும் அற்றவகையில் தனது உரிமையாளர் சரவணபவனின் மோசடிகளை மறைப்பதற்காக எமது கட்சி மீது உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டு தொடர்ந்து எம்மீது சேறுபூச முயற்சித்து வருகிறது என்பதை எமது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’