ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேதின அறைகூவல்!
உரிமை கேட்டு எழுந்த உழைக்கும் மக்கள் தங்களது உறுதியானதும் நீதியானதுமான எழுச்சியின் மூலம் உலகத்தின் கவனத்தை தம் பக்கம் திரும்ப வைத்து உரிமை பெற்ற நாளே மே தினம் என்றும் உழைக்கும் மக்களோடு இணைந்து ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களும் ஒன்றிணைந்து உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மே தினத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாமும் எமது கடந்த கால அனுபவங்களைப் படிப்பினைகளாகக் கற்றுக் கொண்டு இழந்து போன அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்ள நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் அணிதிரண்டு எழுவதற்கு உறுதிகொள்ள வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில் உரிமை கேட்டு போராடுவதற்கான நியாயங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டிய ஜனநாயக உரிமையாகும். இதை ஏற்றுக்கொண்டே நாமும் ஆரம்ப கால கட்டத்தில் போராட முன்வந்து ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்திச் சென்றவர்கள். அதற்காக அர்ப்பணங்களை செய்திருக்கின்றோம் இழப்புக்களை சந்தித்து தியாகங்களைச் செய்திருக்கின்றோம். ஆனாலும் உரிமைக்கான போராட்டம் என்பது எதையும் பெற்றுத்தராத அழிவு யுத்தமாக மாறிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற ஓர் அரிய சந்தர்ப்பத்தின் பின்னர் எமது ஆயுத போராட்டத்தைக் கைவிட்டு நாமும் ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பினோம்.
உரிமை என்பது வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்காகவும் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் வாக்கு கேட்பதற்கான வெற்றுக்கோசங்களாகவும் இருந்து விட முடியாது. மாறாக அது அடைந்தே தீர வேண்டிய மாபெரும் மக்கள் சொத்து ஆகும். ஆனாலும் கடந்த கால மற்றும் சமகால சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் யாவும் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைகளை தமது பாராளுமன்ற நாற்காலி கனவுகளுக்காகவும் அழிவுகளையும் அவலங்களையும் எமது மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்தி அதில் அரசியல் இலாபம் தேடுவதற்காகவுமே பயன்படுத்தி வந்திருக்கின்றன வருகின்றன. போராடித்தான் எதையும் பெற வேண்டும் என்பது வெறும் அரசியல் சூத்திரமோ அன்றி வெறுமனே உச்சரித்துக் கொண்டிருக்கும் மந்திரமோ அல்ல. மாறி வரும் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு அரசியல் தந்திரோபாயங்களின் மூலம் அடைய வேண்டிய இலக்கு நோக்கி செல்வதற்கு, எதிர்ப்பு அரசியலை தவிர்த்து இணக்க அரசியல் வழிமுறையை ஏற்றுக்கொண்டு செயற்பட மறுத்ததாலும் அந்த வழிமுறையை முயன்று பார்க்கக் கூடாது என்ற பிடிவாதத்தினாலும் அடைய வேண்டிய உரிமைகளை எமது மக்கள் அடைய முடியாமல் இருண்ட யுகத்திற்குள் தள்ளப்பட்டனர்.
இணக்க அரசியல் என்பது ஒடுக்கு முறைகளை அனுசரித்து போவது என்று அர்த்தமல்ல. அல்லது உரிமைகளை விட்டுக்கொடுத்து வெறுமனே சமரசம் செய்வது என்றும் அர்த்தமல்ல. பெற்றுக்கொண்ட அரசியல் பலத்தை பேரம் பேசும் பலமாக மாற்றிக்கொண்டு செயற்பட்டிருந்தால் இங்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனாலும் அது இங்கு நிகழ்ந்திருக்கவில்லை என்பதே எமது மக்களின் துயர வரலாறாக மாறியிருக்கின்றது.
இனியும் காலம் கடந்து விடவில்லை. நடந்து முடிந்த தவறுகளை சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்றுக்கொள்ளத் தயாரானால் புதியதொரு நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் எமது மக்களின் உரிமைகளை பெறுவது என்பது சாத்தியமான ஒன்றாகும்.
யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இங்கு யுத்தத்தின் வடுக்கள் மனித அவலங்களாக எம்முன் இருக்கின்றன. இடப்பெயர்வுகள் சொத்திழப்புகள் காணாமற் போனவர்களைத் தேடும் துயரங்கள், நடந்து முடிந்த மனித மரணங்களுக்கான சோகங்கள் கைது செய்யப்பட்டிருப்போர் மற்றும் சரணடைந்திருப்போர் விடுதலை குறித்த பிரச்சினைகள் என அவைகள் தொடர்ந்த படியே உள்ளன. கடந்த கால வன்முறை கலாசாரம் இங்கு இன்னமும் தொடர்ந்த படியே இருக்கின்றது. ஆட்கடத்தல் கப்பம் கோருதல் கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு பணயம் வைத்தல் மற்றும் இது போன்ற வன்முறைகள் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட்டு வருகின்றன.
வன்முறை கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். எஞ்சியிருக்கும் எமது மக்களுக்கெதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல்களும் ஒழிக்கப்பட வேண்டும். அமைதியும் சமாதானமும் இங்கு நீடித்து நிலைக்க வேண்டும். ஜனநாயக சுதந்திரத்தை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும். மனித உரிமைகள் வாழ வேண்டும். நாம் விரும்பும் அரசியலுரிமை சுதந்திரம் என்பது எமது மக்களை வந்தடைய வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்க்கப்பட வேண்டும். இதுவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் விருப்பங்களாகும்.
ஆகவே அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் எமது மக்களின் துயரங்களையும் அவலங்களையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அரசியல் வேறுபாடுகள் இருப்பினும். அவைகளை மறந்து எமது தமிழ் பேசும் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமை பிரச்சினைகளை முதன்மை படுத்தி அவற்றுக்காக உழைப்பதற்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் செல்வதற்கும் முன்வர வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளதுடன் உழைக்கும் மக்கள் தினத்தில் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும் ஒன்று பட்டு உறுதி கொள்ளவும் உழைக்கும் மக்களின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கவும் எமது வரலாற்று வாழ்விடங்களில் இல்லாமை என்பது இல்லாதொழிக்கப்படவும் எமது மக்கள் அனைவரும் உரிமைகள் பெற்ற சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கு அனுபவங்களைப் படிப்பினைகளாகக் கற்றுக்கொண்டு அனைத்து தமிழ் தலைமைகளும் செயற்பட முன்வருவதற்கு மக்களே பிரதானமாக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’