வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு திரை மறைவில் பேச்சு! ஆளுங்கட்சியிலிருந்து சம்பந்தனுக்குத் தூது

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் திரைமறைவுப் பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாம்.
கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேஷன்' ஆங்கில வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை மறைமுகமாகக் கோடி காட்டியுள்ளார்.

""முக்கிய விடயம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டுள்ளீர்களா?'' என்ற கேள்விக்கு ""நான் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனினும் அரசின் சில உறுப்பினர்கள் என்னுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். நாங்கள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம்'' என்று சம்பந்தன் தெரி வித்திருக்கின்றார்.
""இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் தொடர்பாக அரசைச் சேர்ந்த எவருடனும் பேசவும் இணைந்து செயற்படவும் நான் தயாராகவுள்ளேன். நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியே நாங்கள் யாருடன் பேசவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தன்னுடன் தொடர்பு கொண்டவர் யார் என்பதை வெளியிட சம்பந்தன் மறுத்துள்ளார் என்று "த நேஷன்' குறிப்பிட்டுள்ளது.
""இதேவேளை, நாட்டின் சில பிரிவினர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதை விரும்பவில்லை. பிரச்சினை தீர்க்கப்படுவதை விரும்பவில்லை. இதனால் இதற்கான போலியான காரணங்களைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதை விரும்பவில்லை'' என்றும் சம்பந்தன் குற்றம்சாட்டினார்.
""அரசு நேர்மையான தீர்வை முன்வைக்கவேண்டும். தமிழ் மக்கள் மீது எதனையும் திணிக்கலாம் எனக் கருதக்கூடாது. அவ்வாறு கருதினால் அது ஒருபோதும் சாத்தியப்படாது . பயனற்ற நடைமுறைப்படுத்த முடியாத தீர்வொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு எம்மீது அழுத்தம் கொடுத்தால் அதுவும் நடக்காது'' என்றும் சம்பந்தன் எச்சரித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’