வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 மே, 2010

வரவு-செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பிக்க அழுத்தம் கொடுப்போம்:ஜ.தே.கூ

2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை நாம் கொடுப்போம். கணக்கு வாக்கெடுப்புக்கான நான்கு மாத கால பாராளுமன்ற அங்கீகாரம் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்னித்தி தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களுக்கு நிதிப் பங்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மாத்திரமே ஜனாதிபதியினால் அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை. அது இவ்வாரம் கூடவுள்ளது. அரசியலமைப்புக்கு ஏற்ப நாட்டு மக்களின் பணம் பாராளுமன்றத்துக்கு உரித்துடையதாகும். இருந்தபோதிலும், ஜனாதிபதி இந்த அதிகாரத்தை தன்னகத்தே கொண்டு அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளார். இதனை நாம் வெகுவாகக் கண்டிக்கின்றோம் என்றும் அவர் சொன்னார்.
ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜே.வி. பி.யின் செயற்குழு உறுப்பினரும், ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னித்தி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,
"பாராளுமன்றத்தின் அதிகாரங்களை ஜனாதிபதி தன்னகத்தே கொண்டிருப்பது இலங்கையின் அரசியலமைப்பிற்கு எதிரான பாரிய துரோகச் செயலாகும். தேசிய நிதி நிர்வாகத்தை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பதன் மூலம் பாராளுமன்றத்தைக் களங்கப்படுத்தியுள்ளதுடன், மக்கள் ஆணையையும் மீறியுள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் 2010 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிவிப்பை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஆணை வழங்கிய மக்கள் அரசாங்கத்தை தண்டிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகுமெனவும் ஜே.வி.பி. குறிப்பிட்டது.
கடந்த ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்து காணப்பட்டமையாலும், புதிய பாராளுமன்றத்தை தெரிவுச்செய்ய வேண்டிய நிலை காணப்பட்டமையினாலும், 2009 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்க இயலாது என தெரிவித்த அரசாங்கம், வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பை முன் வைப்பதாகவும் அதில் மக்களுக்கு சம்பள உயர்வு உட்பட ஏனைய நிவாரணங்களை வழங்குவதாகவும் கூறியது.
ஆனால், தற்போது உள்நாட்டு யுத்தம் முடிந்து ஒரு வருடக்காலம் பூர்த்தியாகியுள்ளதுடன், நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் சுமுகமானதாகக் காணப்படுகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாமையானது அரசின் இயலாமையையும் கபடத் தனத்தையுமே வெளிக்காட்டுகின்றது.
அரசாங்கம் 2010 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்காது அரசாங்கம் மீண்டுமொரு கணக்கு வாக்கெடுப்பை முன்வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், பாராளுமன்றத்திற்கே உரிய நாட்டின் நிதி நிர்வாகத்தை ஜனாதிபதி, சட்டத்தையும் அரசியலமைப்பையும் மீறி தன்னகம் கொண்டுள்ளார்.
இந்நிலையானது, மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையாகும். இலங்கை அரசியலமைப்பில் 148ஆம், 150ஆம் பிரிவுகளில் தேசிய நிதி நிர்வாகம் தொடர்பாக மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய நிதி நிர்வாகத்தை மூன்று மாதம் போன்ற குறுகிய காலத்திற்கு ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி நிர்வகிக்க முடியும்.
ஆனால், தற்போது அரசாங்கம் அரசியலமைப்பை தனக்கேற்றவாறு மாற்றிக்கொண்டும், தனது தேவைக்கு அமைவாக அர்த்தப்படுத்திக் கொண்டும் ஏமாற்று வேலைகளை கையாள எத்தனிக்கின்றது. அரசாங்கத்தின் இயலமையை மறைத்துக்கொள்ளவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் மக்களைப் பலிக்கடாவாக்கி வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்காது கணக்கு வாக்கெடுப்பை தனது சுய இலாபத்திற்காக முன்வைக்கின்றது.
செயலாளர் இல்லாத அமைச்சு நிதியமைச்சு, மாத்திரமே. சகல வருமானம் தரக்கூடிய அமைச்சுக்களும் ஜனாதிபதியின் உறவினர்களின் கைகளில் உள்ளனது. இது போதாதென்று, தேசிய நிதி நிர்வாகத்தையும் ஜனாதிபதி தன்னகம் கொண்டமையானது நாடு சர்வாதிகார ஆட்சிக்குள் செல்வதையே எடுத்துக்காட்டுவதாகவுள்ளது" என்றும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’