கசிவை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகளை செய்து வருகிறது |
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் கடலில் கசிந்துவரும் எண்ணெய் லுயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது.
தற்போது ஒதுங்கிவருவதைவிட மேலும் அடர்த்தியான எண்ணெய்த் திட்டு கரையோரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கிவிட்டது. கடலடியில் இருந்து எண்ணெயைத் தோண்டியெடுக்கும் இயந்திர மேடை கடந்த வாரம் வெடித்து கடலில் முழ்கியதிலிருந்து குழாய் உடைப்பெடுத்து கடலில் எண்ணெய் கசிந்துவருகிறது.மெக்ஸிகோ வளைகுடா பகுதி கரையோரம் என்பது சுற்றுச்சூழல் ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு இடமாகும். மீன்வளம் மிக்க இந்தப் பகுதி, அமெரிக்காவின் கடலுணவு வழங்கும் முக்கிய பிரதேசமாகவும் விளங்குகிறது. எண்ணெய் திட்டால் கரையோரப் பகுதியில் பாதிப்பு ஏற்படுமானால், மீன்பிடித் தொழில்துறையும் கணிசமாகப் பாதிக்கப்படும்.
குழாய் உடைப்பிலிருந்து ஒரு நாளைக்கு ஐயாரம் பீப்பாய்கள் என்ற அளவில் தொடர்ந்து எண்ணெய் கடலில் கசிந்துவருகிறது என்பதும் அந்தக் கசிவைத் தடுத்து நிறுத்துவது என்பது பெருங்கஷ்டம் என்றும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
எண்ணெய்க் கசிவு ஏற்படும் இடத்தை அடைத்து கசிவை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு நாற்பத்து ஐந்து முதல் தொண்ணூறு நாட்கள் வரை ஆகலாம் என்று இந்த எண்ணெய் தொண்டியெடுக்கும் மேடையை குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறுகிறது.
கடலில் கசிந்த எண்ணெய் |
எண்ணெய்த் திட்டு பரவாமல் தடுக்கும் வேலைகளில் அமெரிக்க கடற்படைப் படகுகளும் ஈடுபட்டுள்ளன. வழங்கப்படக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கி, உள்நாட்டு பாதுகாப்புக்கான அரசாங்க செயலர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அதிபர் ஒபாமா உறுதியளித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையின் எதிரொலியாக மெக்ஸிகோ வளைகுடாவில் மற்ற இடங்களில் ஆழ்கடலில் இருந்து எண்ணெய் எடுக்கும் வேலைகளையும் அமெரிக்க அரசாங்கம் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’