நகர அபிவிருத்தி என்ற பெயரில் தமது குடியிருப்பு காணிகளை சுவிகரிக்க கிளிநொச்சி மாவட்ட செயலகம் முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிளிநொச்சி அம்பாள் குளப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காணிகளில் கடந்த 40 வருடங்களுக்கு மேல் தென்னிலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.இவர்களில் 1977ஆம் ஆண்டு, 1983 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடைபெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிகரிக்கப்படவுள்ள இந்தக் காணிகளில் கிளிநொச்சி நகரத்துக்கான சந்தை மற்றும் பஸ் நிலையம் ஆகியவற்றை அமைக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் சார்பில் கூறப்படுகிறது.
இப்போது குடியிருக்கும் காணிக்குப் பதிலாக வேறு இடத்தில் காணி வழங்கப்பட்டு, அங்கே புதிதாக வீடும் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் அத்துடன், சந்தைப் பகுதியில் வழங்கப்படும் கடைகளில் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலகம் இந்த மக்களுக்குத் தெரிவித்துள்ள போதும் தங்களுடைய காணியை விட்டுக் கொடுப்பதற்கு மக்கள் மறுத்துள்ளனர்.
இதனை அடுத்து இந்தப் பிரச்சினை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரையும் கரைச்சிப் பிரதேசச் செயலரையும் அம்பாள் குளம் பகுதிக்கு அழைத்து மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை கடந்த 26.05.2010 அன்று மேற்கொண்டுள்ளார்.
எனினும் மக்கள் தங்களுடைய குடியிருப்புக் காணிகளை விட்டுக் கொடுக்க முடியாதென்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இருக்கும் இடத்தை விட்டு விட்டு மீண்டும் தாங்கள் அகதிகளாக இன்னொரு இடத்துக்குப் போவதென்பது நியாயமே இல்லை எனவும் நகர அபிவிருத்தியை தாங்கள் விரும்புகின்ற போதிலும் அது மக்களைப் பாதிக்காத வகையில் நடைபெறுவதே பொருத்தமானது என்றும் அம்பாள் குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் மாற்றுக் காணி என்பது தங்களுக்குப் பொருத்தமான இடத்தில் அமையப் போவதில்லை எனவும் அங்கே தாங்கள் மீண்டும் அகதிகளாகவே தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கும் என்றும் மக்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நகர அபிவிருத்தி என்ற பெயரில் இத்தகைய காணி சுவிகரிப்பு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்றும் அப்போதும் மக்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து கடுமையாகப் போராடியதன் விளைவாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, 300 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் காப்பாற்றப்பட்டன என்றும் அப்போது கைவிடப்பட்ட அந்தத் திட்டம் இப்போது மீண்டும் புதிய சூழலில் அமுலாக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இந்த மக்கள் நிலைமையை விளக்கியுள்ளனர்.
அத்துடன் புதிதாக வழங்கப்படவுள்ள அறிவியல் நகர்ப்பகுதி மக்கள் குடியிருப்புக்கு உகந்த பகுதியில்லை எனவும், அந்த நிலத்தில் எந்தப் பயிர்ச் செய்கையும் செய்ய முடியாதென்றும் தெரிவித்த மக்கள், தங்களுக்கு விவசாயக் காணிகளே இல்லாத போது இருக்கின்ற இந்தக் காணிகளையும் இப்படி பறித்துக் கொண்டு, நகரத்திலிருந்து மிகத் தொலைவில் கொண்டுபோய்க் குடியமர்த்துவதன் மூலம் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட தங்களுடைய சகல அடிப்படைத் தேவைகளுக்கும் பெரும் பாதிப்பே ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
எனவே இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, புதிய பஸ் நிலையத்துக்கான மாற்றுத் தீர்வொன்றைக் கண்டு, தங்களின் காணிகளைச் சுவிகரிக்கும் முயற்சியைத் தவிர்க்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் தங்களுடைய காணிகளை விட்டுக் கொடுக்க முடியாதென்று தெரிவித்துள்ளனர். மாற்றுக் காணி என்பது தங்களுக்குப் பொருத்தமான இடத்தில் அமையப் போவதில்லை எனவும் அங்கே தாங்கள் மீண்டும் அகதிகளாகவே தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கும் என்றும் மக்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஆராய்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’