வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முழு முயற்சியுடன் வடபகுதி சுகாதார சேவை மேம்படுத்தப்படும். ஆளுநர் தெரிவிப்பு!

create avatar யாழ். மாவட்ட சுகாதார மேம்பாடும் அதற்கான நடவடிக்கைகளும் தொடர்பான விசேட மாநாடொன்று இன்றைய தினம் (9) முற்பகல் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி ரவீந்திரன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் மாவட்ட வைத்திய நிபுணர்கள் வைத்திய அதிகாரிகள் சுகாதார உயர் அதிகாரிகள் உள்ளுராட்சி மன்ற சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்குகொண்டனர்.
வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் பிரதான உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அவர்கள் யாழ். மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத்திட்டங்களையும் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் நீண்டதொரு உரையினை ஆற்றினார். குறிப்பாக சர்வதேச நாடுகள் ஐ.நா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன எவ்வாறான உதவிகளை கடந்த காலத்தில் மேற்கொண்டன என்பது குறித்தும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்ட வரைபுகள் குறித்தும் விரிவான விளக்கத்தினை அளித்தார். யாழ். சுகாதாரத்துறையானது இன்று எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையான ஆளணி பற்றாக்குறை குறித்து தெரியப்படுத்திய அவர் மொத்தமாக பற்றாக்குறையாக உள்ள வைத்திய நிபுணர்கள் வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஆளணியினர் குறித்த புள்ளிவிபரங்களையும் வெளிப்படுத்தினார்.
மேலும் சித்த மருத்துவத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் நவக்கிரி பகுதியில் அமைக்கப்படவிருக்கும் மூலிகைப் பண்ணையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்சமயம் சுமார் ஒரு ஏக்கர் காணியானது துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையானது தமது கனரக வாகனங்கள் மூலம் இலவசமாகவே துப்புரவுப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ். மனோதத்துவ வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவயோகன் யாழ். மாவட்ட மனோதத்துவ வைத்திய துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். குறிப்பாக கடந்த கால யுத்த அனர்த்தங்களினால் உளவியல் ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இவ்வைத்திய சேவையின் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர் இதன் முதற்கட்டமாக பருத்தித்துறை சாவகச்சேரி சங்கானை தெல்லிப்பளை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய வைத்தியசாலைகளில் மனோதத்துவ வைத்திய பிரிவினை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். மனோதத்துவ துறையானது சித்தசுவாதீனமற்றவர்களுக்கு மட்டுமே என்பதை திட்டவட்டமாக நிராகரித்த அவர் மது பாவனைக்கு அடிமையானோர் விவாகரத்து உள்ளிட்ட குடும்பத்தகராறு போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக்குறிப்பிட்டார். மேலும் யாழில் தற்சமயம் பற்றாக்குறையாக உள்ள சட்ட வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறையினையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் தெரிந்தெடுக்கப்படும் வைத்தி அதிகாரிகளுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி அவர்களை சட்டவைத்திய அதிகாரிகளாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாவும் அறிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் சிறப்புரையாற்றிய வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்கள் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுப்பதாகவும் மாகாண சுகாதார அமைச்சினூடாக தேவைப்பாடுகள் நிறைவேற்றப்படும் அதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார் எனவும் தெரிவித்தார்.
இம் மாநாட்டில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் (தோழர் அசோக்) பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் (தோழர் உதயன்) ஆகியோரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’