வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 மே, 2010

த.கூட்டமைப்பும் மு.கா.வும் பாராளுமன்றில் இன்று சந்தித்து பேச்சு

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தி சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுதல், அரசியல் தீர்வு மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது குறித்து இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலேயே இந்த பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்றது.
இந்த சந்திப்பில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் எம்.பி. யுமான ஹசன் அலி தெவித்தார்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் இணைந்து செயற்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை இன கட்சிகளை அழைக்கவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெவிக்கையில்,
இணைந்து செயற்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் தொலைபேசியூடாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இரு கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் இன்று நடைபெறவிருக்கின்றது.
இரு துருவங்களாக இருந்துகொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியாது என்பதனால் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானத்தை விரைவில் எட்டவேண்டும். அரசியல் தீர்வு, தேர்தல் முறைமையில் மாற்றம் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக நின்று சில விடயங்களை அணுக வேண்டும்.
இனப்பிரச்சினை வடக்கு கிழக்கிலேயே தொடங்கியது என்பதனால் அந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அவ்விடயத்தில் அதிகளவான அக்கறையை காட்டவேண்டும் என்பதுடன் இணைந்து பேசவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் உறவுகளை காப்பாற்றவேண்டியுள்ளது.
தவறவிட்டால் பாரிய பின்னடைவுகளையும் சிறுபான்மையின மக்கள் பின்விளைவுகளையும் சந்திக்கவேண்டிவரும். அதனால் தான் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே இரு சாராரும் கலந்துரையாடி வருகின்றோம்.
முதலாவது சந்திப்பிற்கு பின்னர் ஏனைய சிறுபான்மையின கட்சிகளை இந்த பேச்சுவார்த்தையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அழைப்பு விடுப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’