மொஹாலி: கெவின் பீட்டர்சன் போட்ட முதல் அரை சதமும், ராபின் உத்தப்பாவின் அதிரடியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு நேற்று பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் அணியின் நிலையை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டது பெங்களூர்.
மொஹாலியில் இடந்த இந்தப் போட்டியில் நுழைவதற்கு முன்பு பெரும் இக்கட்டான நிலையில் இருந்த்து பஞ்சாப். ஆனால் ஆட்ட முடிவில் படு மோசமான நிலைக்கு அது தள்ளப்பட்டு விட்டது.
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நன்றாகத்தான் பேட் செய்தது. தொடக்க வீரர் மார்ஷ் 2 ரன்களில் வீழ்ந்தார். பின்னர் வந்த கேப்டன் சங்கக்காரா அதிரடியாக ஆடி 45 ரன்களைக் குவித்தார். ரவி போபராவும் தன் பங்குக்கு 42 ரன்களைக் குவித்தார்.
யுவராஜ் சிங்கும் அதிரடியாக ஆடி 36 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த பஞ்சாப் 181 ரன்களைக் குவித்த்து.
பின்னர் பேட்டிங்கைத் தொடங்கிய பெங்களூருக்கு தொடக்க வீர்ர்கள் தடுமாற்றமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இருப்பினும் கெவின் பீட்டர்சன் வந்து தூக்கி நிறுத்தி விட்டார். 44 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 66 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதை விட அராஜகமாக, ராபின் உத்தப்பா வெறும் 8 பந்துகளில் 22 ரன்களைக் குவித்து பஞ்சாப் கனவில் ஆசிட் வீசி விட்டார்.
இளம் வீரர் விராத் கோலி தனது பங்குக்கு 26 பந்துகளில் 42 ரன்களைக் குவிக்கவே பஞ்சாப் அணிக்கு முடிவுரை எழுதி, 19.1 ஓவர்களிலேயே 184 ரன்களைக் குவித்து வென்று விட்டது பெங்களூர்.
இதன் மூலம் பஞ்சாப் அணியின் கதை இந்த. ஐபிஎல். தொடரில் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அவர்களால் இனி அரை இறுதியைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது.
சொந்த மைதானமான மொஹாலியில் பஞ்சாப் அணி பெறும் நான்காவது தோல்வி இது. மொத்தமாக எட்டு போட்டிகளில் மோதி 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஒன்றில் மட்டுமே பஞ்சாப் வென்றுள்ளது.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக கெவின் பீட்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த முதல் அரை சதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’