வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

வெற்றிடம் நோக்கி வெறித்த பார்வை!

(சீத்தாராம் யெச்சூரி எம்.பி)

“மாவோயிசத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில், நமது நவீன - தாராள வாதக் கொள்கைகளை மாற்றிக் கொள் வதும், ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதி களில் வளர்ச்சிக்கான முதலீடுகள் செய் வதும் அவசியம். வலுவான அரசியல் உறுதியுடன் செயல்படுவது அதைவிட முக்கியம்”


கடந்த 2009 நாடாளுமன்றத் தேர் தலுக்குப் பின்னர் 993 மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதில் 340 கொலைகள் தனிநபர் விரோதம் சம்பந்தப் பட்டவை. அமைதியை மீட்பது, சிவில் நிர்வாகத்தினை நிலை நிறுத்துவது போன்ற பிரச்சனைகள் பேச்சுவார்த் தைக்கு உட்பட்டவையாக இருக்க முடி யாது. சட்டம்-ஒழுங்கினை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். எனினும், அதே வேளையில், தேர்தல் அரசியல் அடிப் படையிலான அற்பத்தனமான கண் ணோட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மாவோயிஸ்ட் வன்முறை “இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகக்கடுமை யான அச்சுறுத்தல்” என பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரோ, மேற்கு வங்கத் தேர்தல்களில் தங்களுக்கு உத வக்கூடும் என்ற நினைப்பில் மாவோ யிஸ்டுகளின் வன்முறையினை தங் களுக்கு ஆதரவாக பயன்படுத்தி வருகின் றனர். மாவோயிஸ்டுகளுக்குத் தரப்படும் அத்தகைய அரசியல் ஆதரவு நாட்டிற்கு எவ்வளவு அபாயகரமானது என்பதை, சத்தீஸ்கர் மாநிலம் தாந்தேவாடாவில் நடைபெற்ற படுகொலைகள் உணர்த்தி யிருக்கின்றன.

அற்பத்தனமான அரசியல்

அடுத்தவர் மீது பழிபோடுவதன் மூலமோ, அரசியல் தர்க்கத்தில் சில வெற்றிகளைப் பெறுவதன் மூலமோ, அத்தகைய வன்முறைகளை எதிர்கொள்ள முடியாது. “பொறுப்பு எங்கே முடிகிறது” என்ற ப.சிதம்பரத்தின் வாதங்கள் மாவோயிஸ்ட்களுக்கே உதவும். இடது தீவிரவாதத்தின் பெயரில் நடைபெறும் அராஜகத்தையும், புரட்சிகர நடவடிக்கைகளையும் சமப்படுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மீது நடத்தும் அவதூறு தாக்குதல்களும் வன்முறை ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடங்கி இதுவரை மேற்குவங்கத் தில் மட்டுமே 200 சிபிஎம் ஊழியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மாவோயிசத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் மார்க்சிஸ்டுகளே முன்னணியில் நிற்கிறார்கள். அராஜகம் என்பது மார்க்சியத்திற்கு நேர் எதிரான தத்துவம்; கொலைவெறி அரசியல் என்பது புரட்சி இயக்கத்தின் அடிப்படை நிலைகளுக்கு முரணானது.

தீவிரவாதத்தின் வரலாறு

இடது தீவிரவாதம் இந்நாட்டில் உருவான வரலாற்றினை சற்றுக் காண்போம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடைபெற்ற சித்தாந்தப் போராட்டத்தின் விளைவாக 1964ல் சிபிஎம் உருவானது. அதைத் தொடர்ந்து, அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்கு ஏற்பட்ட கடுமையான கோபத்தின் விளைவாக 1967ல் மேற்குவங்க மாநிலத்தில் ஒரு ஐக்கிய முன்னணி அரசாங்கம் உருவானது. நிலச்சீர்திருத்தத்திற்கான தீவிரமான போராட்டங்கள் உருவாவதற்கு இது வித்திட்டது. நக்சல்பாரி கிராமத்தில் விவசாய சங்கமாக உருவாகிய இயக்கம், அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கும் போராட்டமாக மாறியது. இந்தப் பின்னணியில், கட்சியிலிருந்த சிலர் 1969 மே மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட்) என்ற பெயரில் கட்சி ஒன்றை உருவாக்கினர். (இவர்கள் நக்சலைட்டுகள் எனவும் அழைக்கப்பட்டனர்).

இந்திய ஆளும் வர்க்கங்கள் “தரகு முத லாளிகள்” (ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகள்) என்ற தவறான புரிதலின் அடிப்படையில், அவர்களுக்கு சமூக பலமோ, உள்நாட்டில் அவர்களைப் பின்பற்றக் கூடிய ஆதரவாளர்கள் என்றோ ஏதுமில்லை என்று நக்சலைட்டுகள் கூறினர். எனவே அரசாங்கத்தைத் தூக்கியெறிவது எளிது எனவும், அது மிக விரைவில் நடந்துவிடும் எனவும் முடிவுக்கு வந்தனர். எனவே, அதைச் செய்வதற்கு மக்களைத் திரட்டுவதற்கோ, வெகுஜனப் புரட்சிக் கட்சியினை உருவாக்குவதற்கோ தேவை ஏதுமில்லை எனவும் முடிவு செய்தனர். இந்திய மக்கள் புரட்சிக்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் நம்பினார்கள். மக்கள் கைகளில் ஆயுதங்களைத் தருகின்ற நடவடிக்கை ஒன்றே உடனடிக் கடமை என்ற அவர்களது சிந்தனையில் உருவானதே “மக்கள் யுத்தம்” என்ற அவர்களது கோஷம். வர்க்க எதிரிகளை “ஒழிப்பது” என்பதும் அந்தக் கோஷத்துடன் ஒட்டிப்பிறந்த மற்றொரு குழந்தை.

உருவான ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே, நக்சலைட் இயக்கம் பல குழுக்களாக உடைந்து சிதறியது. இந்த நிலைமை சில பத்தாண்டுகள் நீடித்தது. இதில் சிபிஐ(எம்எல்) தனது தவறான புரிதலைக் கைவிட்டு, ஜனநாயகப் பெரு நீரோட்டத்தில் இணைவது எனவும், தேர்தல்களில் பங்கேற்பது எனவும் முடிவு செய்தது. மற்ற இரண்டு குழுக்களும், அதாவது, ஆந்திரப் பிரதேசத்தின் “மக்கள் யுத்தம்” குழுவும், ஜார்கண்ட் - பீகார் பகுதி களில் செயல்படும் “மாவோயிஸ்ட் மையம்” குழுவும் தங்களது அராஜக வன்முறை நடவடிக்கைகளைத் தொடர்வது எனவும் முடிவு செய்தன. கடந்த காலங்களில் கடுமையான சித்தாந்தப் போராட்டத்தில் பரஸ்பரம் மோதிக் கொண்டிருந்த இந்த இரண்டு குழுக்களும் 2004 செப்டம்பர் 21ம் நாள் சிபிஐ (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் இணைந்து கொண்டன. அது முதல், அராஜக வன்முறை பெருமளவு அதிகரித்திருக்கிறது. உயிர்ப்பலிகளும் அதிகரித்து வருகின்றன.

மாவோயிசம்?

வெறுத்து ஒதுக்கத்தக்க வன்முறை ஒருபுறமிருக்க, கடுமையான சித்தாந்தப் பிரச்சனைகளும் உள்ளன. மாவோயிசம் என்று வெளிப்படையாகக் கூறும் இவர்கள், மக்கள் சீனத்தில் புரட்சிக்கு முன்னர் இருந்த அனுபவத்தை நவீன இந்தியாவிலும் அப்படியே கடைப்பிடிக்க முடிவு செய்திருக்கின்றனர். தனது சொந்த நாட்டின் பிரத்தியட்ச சூழ்நிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆய்வு செய்யாமல், வேறு ஒரு நாட்டின் அனுபவத்தை எந்தக் கட்சியாவது நடைமுறைப்படுத்து மானால், அதைவிட “குழப்பம்” வேறொன்றும் இருக்க முடியாது என மா சே துங் வலியுறுத்தி கூறியிருக்கிறார். அப்படியானால், இவர்கள் மா சே துங்கையே நிராகரிக்கிறார்கள் என்பதுதானே உண்மை?

இன்னும் கூடச் சொல்லப்போனால், சீன கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிசம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதே இல்லை. மாவோவின் சிந்தனைகள் என்றுதான் கூறுகிறார்கள். “உலகம் முழுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகளையும், சீனப் புரட்சியின் திட்டவட்டமான நடைமுறைகளையும் இணைக்கின்ற சிந்தனை” என்ற அளவிலேயே அந்தச் சொல் அங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் சமுதாய மாற்றம், இந்நாட்டில் நிலவும் திட்டவட்டமான சூழ்நிலை குறித்த ஆய்வின் அடிப்படையிலேயே அமைய முடியும். அது ரஷ்ய அனுபவத்தின் அடிப்படையிலும் இருக்க முடியாது, சீன அனுபவத்தின் அடிப்படையிலும் இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், உலகின் வேறு எந்த அனுபவத்தின் அடிப்படையிலும் இருக்க முடியாது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை

சிபிஎம் தற்போது நம் நாட்டில் இருந்து வரும் முதலாளித்துவ அமைப்பினை மாற்றி, ஒரு மக்கள் ஜனநாயக அமைப்பினை உருவாக்கும் நோக்கில், இந்த நாட்டில் நிலவும் திட்டவட்டமான சூழ்நிலை களுக்குள் இருந்து செயல்படுகிறது. நாடாளுமன்றம் - சட்டமன்றங்களுக்குள் நடத்தும் போராட்டங்கள் மூலமும், வெளியே மக்களைத் திரட்டி நடத்தும் போராட்டங்கள் மூலமும், ஒரு வலுவான வெகுஜனப் புரட்சி இயக்கத்தினை உருவாக்க முயன்று வருகிறது. சமாதானப் பூர்வமான வழிகளிலேயே இதை அடைய முயலுகிறது. ஆனால், அதே வேளையில் வரலாற்று நெடுகிலும் ஆளும் வர்க்கங்கள் எவையும் தங்களது அதிகாரத்தை இழப்பதற்கு அவ்வளவு எளிதாகச் சம்மதித்ததில்லை என்ற அனுபவ உண்மையினையும் புரிந்து வைத்திருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிராகரிக்கும் வகையில் ஆளும் வர்க்கம் பயன்படுத்தக்கூடிய வன்முறையினை எதிர்கொள்ள வேண்டிய தேவையினையும் உணர்ந்தே இருக்கிறது.

ஒன்றுபட்ட அணுகுமுறை

மக்களின் அவலமான நிலைகள் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளுக்கு செழிப்பான விளைநிலமாக பயன்பட்டு வருகின்றன. அவையெல்லாம் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். மாவோயிஸ்டுகள் சுறுசுறுப்பாய் செயல்படும் பிரதேசங்கள் அனைத்திலும், நவீன - தாராளவாதக் கொள்கைகளின் விளைவாக, அந்தப் பகுதிகளிலுள்ள செழிப்பான கனிம வளங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக அந்த காடுகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை அவலத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அந்தப் பாழாய்ப் போன கொள்கைகளைக் கைவிடாமல், அந்த அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தாமல், மாவோயிஸ்ட் வன்முறையினைத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த வன்முறை வெறியாட்டத்தினைத் எதிர்கொள்வதற்கு பன்முக நடவடிக்கைகளும் கட்சி சமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறையும் தேவை. அதற்கான நேரமும் வந்துவிட்டது. தேவைப்படுகின்ற சட்ட-ஒழுங்கு நட வடிக்கைகள், வலுவான அரசியல் உறுதி, இந்தப் பிரதேசங்களின் பின்தங்கிய நிலைமையினைப் போக்குவதற்கான மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய மூன்று அம்சங்களும் இதற்கு இன்று முக்கியத் தேவைகளாக அமைகின்றன.

தமிழில் : இ.எம்.ஜோசப்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’