வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஏப்ரல், 2010

இந்தியாவில் அணுசக்தி உலக மையம்


 

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிளானியும்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிளானியும்
அணுசக்திக் கூட்டுறவுக்கான உலக மையம் இந்தியாவில் அமைக்கப்படும் என்று வாஷிங்டனில் நடைபெறும் உலக அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி அமைப்பு மற்றும் ஆர்வமுள்ள உலக நாடுகளின் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த அணுசக்தி மையத்தில், நவீன அணுசக்தி முறை ஆய்வுகள், அணுசக்தி பாதுகாப்பு, கதிரியக்க பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், வேளாண்மை மற்றும் உணவுத் துறைகளில் கதிரியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், தேசவிரோத சக்திகளின் கையில் சிக்கக்கூடிய அபாயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் இந்தியா அதுபற்றி மிகுந்த கவலை கொண்டிருக்கிறது என்றும் மன்மோகன் சுட்டிக்காட்டினார்.
அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது, நாடுகளின் கையில் உள்ளது. அது, அந்த நாடுகள் எந்த அளவுக்குப் பொறுப்புடன் நடந்துகொள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். இல்லாவிட்டால் அவை வெற்றுக் கோஷங்களாகவே அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
சட்ட விரோத அணு ஆயுதப்பரவல்
உலக அளவிலான அணு ஆயுதப் பரவல் அமைப்பு அணுசக்திப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று மன்மோகன் கவலை வெளியிட்டார்.
கள்ளத்தனமான அணு ஆயுதப் பரவல் அனைத்து நாடுகளுக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்திவிட்டது; குறிப்பாக இந்தியாவுக்கு அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் பழைய தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அவர் பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்களைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார் என ஆய்வாளர்கள் கூறும் அதே நேரத்தில், பாகிஸ்தானைப் பற்றி பிரதமர் நேரடியாக எதுவும் குறிப்பிடவில்லை.
உலக அளவிலான அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கை, அனைத்து நாடுகளையும் உளளடக்கியதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
அணுசக்தி பயங்கரவாத ஆபத்து நம் முன் உள்ள நிலையில், அணு ஆயுதங்களை விரைவில் அழிக்க வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளுக்கும் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அளித்த வரவேற்பு விருந்து நிகழ்ச்சியின்போது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிளானியும் சந்தித்துக் கொண்டனர்.
இரு தலைவர்களும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’