வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

'மனிதன் வாழ மாடுகள் தேவை'



 

மனிதன் வாழ மாடுகள் தேவை
மனிதன் வாழ மாடுகள் தேவை
மனித சமூகம் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டுமானால் மாடு வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்காவில் வறட்சியை சமாளிக்க உதவுகின்ற உதவி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
இந்தப் பகுதியில் வறட்சி காரணமாக சுமார் ஒரு கோடி மக்கள் உணவுப் பற்றாக் குறையை எதிர்கொள்கிறார்கள். இவர்களில் பெருமளவிலானோர், பெரும்பாலும் சகாரா பாலைவனத்தில் இருக்கின்ற நாடான நைஜரைச் சேர்ந்தவர்களாவர்.
வறட்சிக்காக உதவி நிறுவனங்களால் வழமையாக வழங்கப்படுகின்ற மக்களுக்கான உணவு விநியோகம் போன்றவற்றுடன் இந்தப் பகுதியில், மாடுகள் மற்றும் மாடு மேய்ப்போர் எதிர்கொள்கின்ற நீண்ட கால பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கெயார் என்னும் அந்த உதவி நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான நைஜரில் வாழும் மக்களில் பெருமளவிலானோர் தமது அன்றாட வாழ்க்கைக்காக மாடு வளர்ப்பிலேயே தங்கியிருக்கிறார்கள்.
மாடுகள் பால் மற்றும் இறைச்சி வடிவில் அவர்களுக்கான உணவை வழங்குகின்றன. அவற்றின் தோலுக்காக அவற்றை விற்கவும் முடியும். அங்குள்ள மக்களின் சேமிப்பு என்பது அவர்களிடம் இருக்கும் மாடுகளின் அளவை வைத்தே கணிக்கப்படுகிறது.
தற்போதைய வறட்சி மாடு மேய்ப்போரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. மழை வீழ்ச்சி மிகவும் மோசமாக பொய்த்துப்போயிருப்பதுடன் நாடெங்கிலும் சீராக மழை பெய்யவுமில்லை.
ஆகவே மந்தைகளை மேய்ச்சலுக்காக நீண்ட தூரத்துக்கு ஓட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது.
பல சந்தர்ப்பங்களில் தம்மால் இந்த மாடுகளுக்கான உணவை வழங்குவது இயலாத காரியம் என்று நம்புகின்ற மேய்ப்பர்கள், தமது பெரும் சொத்தான மாடுகளை விற்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மாடுகள் விற்பனைக்காக காத்திருப்பதால், அவற்றின் விலையும் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சாதாரண காலத்தில் 200 டாலர்களுக்கு விற்கப்படக் கூடிய ஒரு மாடு, தற்போதைய நிலையில் அதில் பல மடங்கு குறைவான விலைக்கே போகிறது.
இந்த நிலையில் அந்த மாடுகளுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதன் மூலமும், மந்தைகளை விற்காமல் இருப்பதற்கான மாற்று வழியை காண ஆலோசனை கூறுவதன்  மூலமும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கெயார் நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்வு உதவிகள்
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்வு உதவிகள்
பெருமளவிலான மாடுகள் இறைச்சிக்காக விற்கப்பட்டால், அவற்றின் பண்ணைகளை மீண்டும் உருவாக்குவது என்பது மிகவும் சிரமமானதாக போய்விடும். அத்தோடு அப்படியாக அந்த மாடுகளை இழந்துவிட்டால், மாடுகளை வளர்ப்போரும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்வதுடன் அவர்களுக்கு உணவு உதவியும் விநியோகிக்கப்பட வேண்டிய தேவை வரும்.
அது மாத்திரமன்றி இந்த மாடு வளர்ப்போருக்கு உதவுவது கூட ஒரு குழப்பமான நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், மாடு மேய்ப்போர் எங்கும் பரவிக் கிடப்பவர்கள் என்பதாலும், எப்போதும் இடம்பெயர்ந்த வண்ணம் இருக்கும் சமூகம் என்பதாலும், அவர்களுக்கு உதவிகளை விநியோகிப்பது சிரமமாகும்.
இருந்தபோதிலும், நைஜர் போன்ற நாடுகளில் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு இந்த உதவிகள் மிகவும் முக்கியமானவை என்றும் கெயார் நிறுவனம் கூறுகிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’