இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற அரசின் கருத்துக்குக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் இனவாதம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது கருத்தினை தாம் ஏற்றுக் கொள்வதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. அதனை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவை சேனாதிராஜா வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,
எமது கட்சியைத் தடை செய்வது பற்றி அரசாங்கம் எழுந்தமானமாக தீர்மானம் எடுக்க முடியாது. எமது மக்கள் எதிர்பார்க்கும் சுயநிர்ணய உரிமையை அரசியல் தீர்வினூடாக பெற்றுக்கொடுக்கவே நாம் முயற்சி செய்கின்றோம். இதற்காக சர்வதேச அரங்கில் எமக்கு பூரண ஆதரவு உண்டு.
அரசாங்கம் எம்மைத் தடைசெய்யுமாயின், சர்வதேச ரீதியில் மக்களைத் திரட்டி சாத்வீகமான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எமது கட்சி தயாராகவுள்ளது" என்றார்.
ததேகூ குறித்து கோத்தபாய உரை
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக ஆற்றிய உரையில்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசித்துப் பாருங்கள். அவர்கள் இன்னும் பிரிவினைவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
அவர்கள் இன்றும் தனிநாடு பற்றிப் பேசுகிறார்கள். அதிகாரத்தைப் பகிர்வது பற்றிப் பேசுகிறார்கள். இன்றும் வடக்கு கிழக்கு இணைப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். பொலிஸ் அதிகாரம் பற்றிப் பேசுகிறார்கள். இவ்வாறு விஷமமான விடயங்களை மக்கள் மத்தியில் பரப்பி இனவாதத்தைத் தூண்டுகிறார்கள்.
நாங்கள் முப்பது வருட காலமாக பல்வேறு இழப்புகளைச் சந்தித்து நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை இல்லாதொழித்தோம். இனியும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். இவ்வாறு இனப் பாகுபாட்டினைத் தூண்டும் கட்சிகளை நீதியான வழியில் தடைசெய்ய வேண்டும்.
இனவாத கருத்துக்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பலம் பொருந்திய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’