வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சசி தரூர் மீதான நடவடிக்கை குறித்து மன்மோகன் சிங் இன்று முடிவு

ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் மீதான நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று முடிவெடுக்கவுள்ளார்.
இதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி தப்பி வரும் தரூர் இந்த முறை தப்ப முடியாது என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே உறுதியாக கூறுகின்றனர். இந்த முறை அவரால் ஏற்பட்டுள்ள சர்ச்சை சோனியா காந்தியை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை ஆறரை மணியளவில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கியக் குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் தரூர் தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
தரூரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குரல்கள் வலுத்து வருகின்றன. அவரால் கட்சிக்கு பெரும் அவப் பெயரும், தர்மசங்கடமும் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு வலுத்துள்ளது.
மேலும் ஐபிஎல் கொச்சி அணி ஏலத்தின்போது தரூரின் உதவியாளரான ஜேக்கப் ஜோசப் அங்கு போய் உட்கார்ந்ததும் காங்கிரஸ் தலைவர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேவேளை தரூரை நீக்கி விட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என சில தரூர் ஆதரவு குரல்களும் ஒலிக்கத்தான் செய்கின்றன.
எனினும் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள், தரூரை நீடிக்கா விட்டால், எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு பிரதமர்தான் பதில் சொல்லியாக வேண்டிய நிலை ஏற்படும். யாரோ செய்த தவறுக்கு பிரதமரை சிரமப்படுத்துவது நியாயமல்ல என்று தெரிவிக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் தரூர் குறித்த இறுதி முடிவை பிரதமரும், காங்கிரஸும் எடுக்கவுள்ளனர்.
அதேவேளை ஐபிஎல் கொச்சி அணி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் கட்ட அறிக்கையை வருமான வரித்துறையினர், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதில் ஐபிஎல் கொச்சி அணியின் உரிமையாளர்கள், அவர்கள் குறித்த முழு தகவல்கள், மற்றும் ஐபிஎல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், அணிகளின் நிதி நிர்வாக விவரம், பினாமி முதலீடுகள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுறது.
இதுதவிர அனைத்து அணிகளின் உரிமையாளர் விவரங்கள், ஏலம் நடந்தபோது கேட்கப்பட்ட தொகைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வருமான வரித்துறை கோரியுள்ளது. தற்போது ஐபிஎல் விவகார வழக்கை பிரணாப் முகர்ஜியே நேரடியாக கையாளுகிறாராம். இதனால் மோசடி செய்த யாரும் தப்ப முடியாது என்று நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ஐபிஎல் மற்றும் சசி தரூர் விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இரு அவைகளையும் நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இந்த விசாரணையை விரைவுபடுத்தி மேலும் பல தகவல்களை சேகரித்து அதை பிரதமரிடம் ஒப்படைக்க பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தரூர் மற்றும் ஐபிஎல் சர்ச்சை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விளக்கம் அளிக்க முடியும் என அரசு நம்புகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’