கடந்த கால அரசியல் வாதிகள் கொள்கையற்றவர்களாக இருந்த படியால்தான் போரும் அழிவுகளும் எமது மக்களுக்கு ஏற்பட்டது என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாரதிபுரம் விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு யாழ் மாநகர மேயர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் உழைப்பதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கொள்கையாகும்.
ஆனால் முன்னைய அரசியல் வாதிகள் கொள்கையற்றவர்களாகவே தமது அரசியல் வாழ்வில் ஈடுபட்டனர். இதனால் தான் எமது மக்கள் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து நிர்க்கதியாகியுள்ளனர். அதே அரசியல்வாதிகள் இன்றும் கூட நடைமுறைக்குச் சாத்தியமாகாத தீர்வுத் திட்டங்ளை முன்வைத்து, பிரச்சார மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால் மக்களாகிய நீங்கள் உண்மையான சமூகத் தொண்டன் யார் என்பதையும் உங்கள் வளமான எதிர்காலத்திற்காக உழைப்பவர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அங்கு கருத்துத் தெரிவித்த சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் எப்படியான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்பட்டதோ அதேவிதமான மேலும் பலவகையான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக ஜனாதிபதியுடனும் தொழில்துறை சார்ந்த அதிகாரிகளிடம் இணக்கப்பாடு கண்டதற்கு அமைய குடாநாட்டில் விரைவில் 03 ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்படுவதுடன் 5000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதுடன் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் நிச்சயம் எமது பங்களிப்பு இருக்கும். இவை தேர்தலுக்கான வாக்குறுதிகளோ கோஷங்களோ அல்ல. உங்களது சமூகத்தை வளர்ச்சியடைச் செய்யும் எமது பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் ஊடகவியலாளர் கோவை நந்தன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’