வடமராட்சி துன்னாலை தெற்கு கலிகை கந்தன் ஆலய நிர்வாகத்தினருக்கும் திருவிழா உபயகாரர்களுக்கும் இடையே நிலவி வந்த முரண்பாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கலிகைக் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
வடமராட்சி துன்னாலை தெற்கு கலிகை கந்தன் ஆலயத் தலைவர் திரு க.செல்லத்துரை மாஸ்ரர் தலைமையிலான நிர்வாகத்தினருக்கும் திருவிழா உபயகாரர்களுக்கும் இடையே திருவிழா நடாத்துவது தொடர்பாக நிலவி வந்த முரண்பாடு ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட இருதரப்பினருடன் அமைச்சர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் கலந்துரையாடலை நடாத்தினார். பின்னர் நேற்று காலையும் இரு தரப்பினருடன் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. அதனையடுத்து பிற்பகல் திருவிழா நடாத்துவது தொடர்பில் சுமூகமான முறையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. ஆலயத்தின் திருவிழாக்கள் முடிவடைந்ததும் அமைச்சரின் முன்னிலையில் ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெறும் என கரவெட்டிப் பிரதேசசெயலர் திரு சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா 10வது திருவிழாவுடன் முடிவடையும். குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரக் கலை நிகழ்ச்சிகளும் இசைக் கச்சேரிகளும் நடாத்த திருவிழா உபயகாரர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’