எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் மறுவாக்களிப்பில், நாவலப்பிட்டிய தொகுதி தமிழ் பேசும் வாக்காளர்கள் அளிக்கின்ற வாக்குகளில்தான் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் தங்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய மறுவாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் கூறியதாவது,
இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின்படி நான் வெற்றி பெறக்கூடிய நிலையில் இருக்கின்றேன். நாவலப்பிட்டிய வாக்காளர்கள் தேர்தல் மறுவாக்களிப்பில் அளிக்கப்போகின்ற வாக்குகளின் மூலமாகவே எமது வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்படும். சின்னத்திற்கு வாக்களிப்பதுடன், விருப்பு வாக்கு இலக்கத்திற்கு விழிப்புணர்வுடனும், விவேகத்துடனும் வாக்களிப்பதன் மூலமாக இதை சாத்தியமாக்கலாம்.
நாவலப்பிட்டிய தொகுதியில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற வாக்களிப்பு பிரதேசங்களில் மறுவாக்களிப்பு நடைபெறுவதற்கு முதற்காரணமாக இருந்ததன் மூலமாக, வெற்றி பெறுவதற்கு முன்னாலேயே நான் கண்டி மாவட்ட மக்களுக்கு வழங்கிய முதல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றேன்.
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இத்தகைய வன்முறை இன்று, நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல. 2000ம், 2001ம், 2004ம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களின் போதும், 2004ம், 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாகாணசபை தேர்தல்களின் போதும் வெவ்வேறு வடிவங்களில் முறைகேடுகள் நாவலப்பிட்டியவில் நடைபெற்றன.
வாக்களிப்பு நிலையங்களை கைப்பற்றி, அங்கே மோசடிகள் இடம்பெறுவது ஒருபுறம் இருக்க, வாக்களிப்பு நிலையங்களையும், தோட்டங்களையும் இணைக்கும் வீதிகளில் இருக்கின்ற கிராமபுற சந்திகளில் கூடுகின்ற காடையர்கள் வாக்களிக்கச் செல்லும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களை அடித்து விரட்டினார்கள்.
வாக்களிப்பு நிலையங்களிலிருந்து 200, 300 யார் தூரத்திலே கூடி நின்று வாக்களிக்கவரும் தமிழ், முஸ்லிம் மக்களை விரட்டியடித்த சம்பவங்கள் நாவலப்பிட்டிய நகரில்கூட நடந்தன. வாக்காளர் அட்டைகளும், அடையாள அட்டைகளும் பறிக்கப்பட்டன.
தேர்தலுக்கு முதல் நாள் இரவு தோட்டத் குடியிருப்புக்குச் சென்ற காடையர்கள் கோஷ்டிகள் தோட்டத் தொழிலாளர்களை பயமுறுத்தினார்கள். வாக்களிக்ககூடாது என்றும், வாக்களிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்.
சுதந்திரமாக வாக்களிப்பவர்களின் வாக்குகள் கண்டுபிடிக்கப்படுமென பொய் பிரசாரங்களை பரப்பியும் அப்பாவி தொழிலாளர்களை ஏமாற்றினார்கள்.
கடந்த காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றாலும், அவற்றுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் இம்முறை இச்சம்பவங்கள் சபைக்கு வந்துள்ளன.
தேசிய ரீதியாக ஜனாதிபதி, தேர்தல் ஆணையாளர் ஆகியோரது தவிர்க்க முடியாத கவனங்களுக்கு கொண்டுவரப்பட்டன. பாராளுமன்றத்தில் தேர்தல் ஆரம்பித்து முதல் வாரத்தில் இடம்பெற்ற அவசரக்கால சட்ட விவாதத்தின்போது நான் தனிமனிதாக இப்பிரச்சினையை கிளப்பினேன்.
நாவலப்பிட்டிய அராஜகத்திற்கு எதிராக சுலோக அட்டையை சபை நடுவே தாங்கி ஆர்ப்பாட்டம் செய்தேன். ஆளுங்கட்சி வேட்பாளர்கள்கூட நுழைய முடியாது எனக்கூறப்பட்ட நாவலப்பிட்டிய நகருக்குள் இறங்கி நடந்துசென்று பிரசாரம் செய்தேன் இதன் மூலமாக எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும், எனது பிரசார வாகனங்களுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு நான் முகங்கொடுத்தேன்.
இவை அனைத்திற்கும் நாங்கள் பயந்து ஓடி ஒளியவில்லை. இதனால் இந்த அக்கிரமம் தேசத்தின் கவனத்தை கவர்ந்தது. ஜனாதிபதி அவர்களையும், தேர்தல் ஆணையாளரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இவற்றின் பிரதிபலனாகவே இன்று நாவலப்பிட்டிய தொகுதியின் வாக்களிப்பு பிரதேசங்களில் மறுவாக்களிப்பு நடைபெறுகின்றது.
இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு தமிழ் பேசும் வாக்காளர்கள் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் மறுவாக்களிப்பில் வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’