இலங்கையில் அவசர நிலையை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கரிசனைகள் வெளியிடப்பட்டு வந்துள்ள ஒரு சூழலில், அந்நாட்டில் அமலில் இருந்துவரும் அவசர நிலையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அவசரகால சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. 
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், நாட்டில அவசர நிலை தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கிவருகிறது. 
மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது. 
நாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
புதிய அரசின் வெளிவிவகார கொள்கை
நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும் வகையில் புதிய அரசின் வெளிவிவகார கொள்கை அமையும் என்று பீரிஸ் கூறினார்.
"நாட்டில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளுடனான நல்லுறவுகளை மேம்படுத்துவதில் முனைந்து செயல்படுவது என்பதுதான் எமது வெளியுறவு கொள்கையின் அடிநாதமாக இருக்கும்." என்றார் அவர். 
சார்க்
பூட்டான் தலைநகர் திம்புவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு நடக்கும்போது இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது என்றும் பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் அப்போது விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 
ஆனாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தப் பிரேரணையும் சார்க் கூட்டத்துக்கு இலங்கை அரசு கொண்டு செல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டார்
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’