வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஏப்ரல், 2010

தேர்தலில் போட்டியிட்டோரில் சகோதரர்கள்-உறவினர்கள் பலர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு

பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் பலர் இம்முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் மகன் நாமல் ராஜபக்ஷ மற்றும் உறவுமுறை சகோதரியான நிரூபமா ராஜபக்ஷ ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
அத்தோடு முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தேசிய பட்டியல் எம்.பியாக அமைச்சர் பதவி வகிப்பதோடு அவரது மகன் விதுர விக்ரமநாயக்கவும் களுத்துறை மாவட்ட எம்.பியாக ஆளும் தரப்பில் தெரிவாகியுள்ளார்.
பிரதமர் டி. எம். ஜயரத்ன தேசிய பட்டியலில் நியமனம் பெற்றுள்ளதோடு அவரது மருமகன் துமிந்த திஸாநாயக அநுராதபுர மாவட்ட எம்.பியாகத் தெரிவாகியுள்ளார்.
கலாநிதி சரத் அமுனுகம மற்றும் அவரது உறவு முறை மகனான அமுனுகமவும் தெரிவாகியுள்ளனர். தினேஷ் குணவர்தன, கீதாஞ்சன குணவர்தன சகோதரர்கள் மற்றும் மகிந்த யாபா அபேவர்தன, லக்ஷ்மன் யாபா அபேவர்தன உறவு முறை சகோதரர்களும் தெரிவாகியுள்ளனர்.
அதேவேளை, ஐ. தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் உறவு முறை சகோதரரான ருவன் விஜேவர்தன கம்பஹா மாவட்டத்தில் வெற்றியை பெற்றுள்ளார்.

கரு ஜயசூரிய மற்றும் அவரது மருமகன் நவீன் திசாநாயக்கவும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட்டு அர்ஜுன ரணதுங்க வெற்றி பெற்றுள்ளதோடு சகோதரர் ருவன் ரணதுங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஐ. தே. கட்சியில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட வசந்த அலுவிஹார வெற்றி பெற்றுள்ளதோடு சகோதரர் ரஞ்சித் அலுவிஹார தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஐ.தே. கட்சியின் ருக்மன் சேனாநாயக்க தேசிய பட்டியல் எம். பி. பதவியை இழந்த போது அவரது உறவு முறை மகனான வசந்த சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தெரிவானார்.
முன்னாள் சபாநாயகர் லொக்கு பண்டார நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்த நிலையில், அவரது மகன் உதித லொக்கு பண்டார ஆளும் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச தோல்வியைத் தழுவினார்.
அனுருத்த ரத்வத்தைக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படாத போதிலும் மகனான லொஹான் ரத்வத்தை கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஆளும் தரப்பில் சரத் கோங்காகே தேசியப் பட்டியலில் இடத்தை இழந்ததோடு அவரது மனைவியான ஐ. தே. கட்சியில் போட்டியிட்ட சாந்தினி கோங்காகே தோல்வியைத் தழுவினார்.
ஐ. தே. கட்சியில் பதுளையில் போட்டியிட்ட ரவீந்திர சமரவீர, உபாலி சமரவீர சகோதரர்கள் இருவரும் தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.
ஐ. தே. கட்சியில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசன் கொழும்பு மாவட்டத்தில் வெற்றியீட்டிய போதும் அவரது சகோதரரும் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் தோல்வியைத் தழுவினார்.
ஜீவன் குமாரதுங்க வெற்றி பெற்றதோடு அவரது உறவு முறை மகனான ரஞ்சன் ராமநாயக்க இருவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’