டுபாயில் இருந்து 361 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 17 பயணிகள் காயம் அடைந்தனர் என்று விமான அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர்.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 777 ஜெட் போயிங் விமானம், துபாயில் இருந்து 361 பயணிகளுடன் நேற்றுக் காலை கொச்சிக்கு வந்தது.
இது குறித்து விமானத்தில் பயணித்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில்,
"விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் ஏற்பட்ட காற்று வெற்றிடத்தில் விமானம் சிக்கியது. இதனால், விமானத்தால் மேற்கொண்டு பறக்க முடியாமல் போனது.
திடீரென கீழ் நோக்கி 1,500 அடி வரை தலைகீழாக விமானம் பாய்ந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்ததால், விமானத்தில் கீழே விழுந்து உருண்டனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கப் போவதாக நினைத்து பீதியில் பயணிகள் அலறினர்.
33,500 அடிக்கு கீழ் காற்று வெற்றிடம் இல்லாமல் இருந்தது. இதனால், விமானம் அந்த இடத்துக்கு வந்ததும் சீராக பறக்கத் தொடங்கியது. இதனால், மிகப் பெரிய விபத்திலிருந்து அது தப்பியது.
விமானத்துக்குள் உருண்டதால் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். எல்லா பயணிகளும் பீதியில் உறைந்து கிடந்தனர். விமானம் சகஜ நிலைக்கு வந்ததும் கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொண்டு, நடுவானில் நடந்த விபரீதம் பற்றி கூறினார்.
அவசரமாகத் தரையிறங்க வேண்டும் என்றும் கூறி அனுமதி கேட்டார். உடனே, மருத்துவக் குழுக்கள் அழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமானம் பத்திரமாக தரை இறங்கியதும் காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நடுவானில் ஏற்படக் கூடிய காற்று வெற்றிடத்தை ரேடார்களாலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன" என்றார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’