இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது, வடக்கே போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என தேர்தல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அங்கு வாக்குப் பதிவு 50 சதத்துக்கும் குறைவாகவே இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.ஐந்தில் ஒரு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி 60 சதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது.
ராஜபக்ஷவின் சொந்தப் பிரதேசமான தெற்கே, அவருக்கு இந்தத் தேர்தலில் பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பிறகு, ராஜபக்ஷவின் செல்வாக்கு அங்கு அதிகரித்தது.
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டவரும், தற்போது காவலில் உள்ளவருமான முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் ஐக்கிய தேசியக் கட்சி, ஐந்து சதம் வாக்குகளை மட்டும் பெற்று பின்தங்கியுள்ளது.
`ஜனாதிபதிக்கு அங்கீகாரம்’
ஆரம்பகட்டத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் தனியாக ஆட்சியமைக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கவில்லை என்று சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான சுயாதீன அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.
வடக்கே உள்ள பெரும்பாலான தமிழ் அகதிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், வாக்களிப்பதற்கு எத்தகைய அடையாள அட்டைகள் அல்லது ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டியில் மறு வாக்குப் பதிவு
கண்டி நாவலப்பிட்டியவில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வாக்கெடுப்பு மையத்துக்குள் நுழைய முயன்றபோது அதைத் தடுக்க முயன்ற தேர்தல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்றில் இரண்டு பங்கு இடங்களையோ அல்லது 150க்கும் மேற்பட்ட இடங்களையோ வென்றால், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
சிறுபான்மையினருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மேலவை ஒன்றை ஏற்படுத்தப் போவதாக ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், பெரும்பான்மையான தமிழ் அரசியல்வாதிகள் விரும்புவதுபோல், கூட்டாட்சி முறையை ஏற்படுத்த ஜனாதிபதி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’