வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 மார்ச், 2010

செய்தியறிக்கை

இராக் நாடாளுமன்ற தேர்தல்
இராக் நாடாளுமன்ற தேர்தல்

இராக் நாடாளுமன்றத்துக்கான வாக்குப்பதிவின் போது தாக்குதல்

இராக் நாடாளுமன்ற தேர்தலின் முதல்நாள் வாக்கெடுப்பின் போது வாக்குச்சாவடிகளை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழிமை நடைபெறவுள்ள தேர்தலின் பாதுகாப்புக்கடமைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு வசதியாக, இராணுவப்படைகளைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முன்கூட்டியே தமது வாக்குப்பதிவுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இராக்கில் தங்கியிருக்கும் தமது படையினரை எதிர்வரும் மாதங்களில் குறைப்பதற்கு அமெரிக்கா தயாராகிவருகின்ற நிலையில், அந்நாட்டின் ஸ்திரத்தன்மையை அறிவதற்கான முக்கிய பரீட்சார்த்த நடவடிக்கையாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுவதாக பாக்தாத்திலுள்ள பி.பி.சி செய்தியாளர் குறிப்பிட்டார்.


இஸ்லாமுக்கு எதிரான விமர்சனங்களை கொண்ட தலைவரின் கட்சி வெற்றி

கியர்ட் வில்டர்ஸ்
கியர்ட் வில்டர்ஸ்

நெதர்லாந்தில் இஸ்லாத்துக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகப் பேசிவருகின்ற கியர்ட் வில்டர்ஸ், தனது கட்சி உள்ளூராட்சி தேர்தல்களில் பெற்ற சாதனை வெற்றியை கொண்டாடுகிறார்.

இந்த வெற்றி ஜூன் மாதத்தில் நடக்க இருக்கின்ற தேசிய தேர்தலில் தமது கட்சி வெற்றிபெறுவதற்கான உந்துதலாக அமையும் என்று அவர் விபரித்துள்ளார்.

பொப்யூலிஸ்ட் ஃபிரீடம் பார்ட்டி என்னும் கட்சிக்கு தலைமை தாங்குகின்ற வில்டர்ஸ் அவர்கள், நெதர்லாந்து இஸ்லாமிய மயப்படுத்தப்படுவதாகக் கூறி அதற்கு எதிராக செயற்பட்டு வருவதுடன், நெதர்லாந்தில் குர்-ஆன் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்ஸ்ரடத்துக்கு வெளியே அல்மயர் என்னும் நகரின் கட்டுப்பாட்டை இந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளதுடன், த ஹேக்கில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

வில்டர்ஸின் வெற்றி இஸ்லாத்துக்கு எதிரான ஆதாரமற்ற அச்சத்தில் இருந்து உருவானது என்று டச்சு முஸ்லிம் கட்சியின் தலைவரான ஹென்னி கிரீவ்ட் கூறுகிறார்.


உகாண்டா நிலச்சரிவில் பலர் பலி

உகாண்டாவில் நிலச்சரிவு
உகாண்டாவில் நிலச்சரிவு

உகண்டாவின் கிழக்குப் பகுதியில் மூன்று கிராமங்களை அடித்துச் சென்ற நிலச்சரிவில் பலியானவர்களின் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சில குடும்பங்களைப் பொறுத்தவரை அவை முற்றாக அழிந்துவிட்டதாக அங்கு சம்பவ இடத்தில் இருந்த ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தொண்ணூறுக்கும் அதிகமான சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 260க்கும் அதிகமானோரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலச்சரிவால் வதிவிடங்களை இழந்த சுமார் ஐயாயிரம் பேருக்கு தாம் கூடாரங்களையும், பிளார்ஸ்டிக் விரிப்புகளையும் விநியோகித்துள்ளதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு கூறுகின்றது.


டைனோசரை ஒத்த உயிரினத்தின் எலும்புகள் கண்டுபிடிப்பு

டைனோசர் எலும்பு படிமங்கள்
டைனோசர் எலும்பு படிமங்கள்

மிகப்பழங்காலத்தில் பூமியில் உலாவியதாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த எலும்புகள், முன்னர் டைனோசர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் காலத்திற்கும் சுமார் 10 மில்லியன் வருடங்களுக்கு முந்திய காலத்துக்குரியது என கருதப்படுகின்றது.

டன்சானியாவில் உள்ள இடமொன்றிலிருந்து இந்த புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த உயிரினம் இருநூற்று நாற்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

டைனோசர் பரம்பரையின் ஆரம்பக்கட்டங்கள் குறித்து மீள ஆய்வுநடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்த புதிய கண்டுபடிப்புகள் தம்மை தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியரங்கம்
 பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

இந்தியாவில் கோயில் நெரிசலில் சிக்கி பலர் பலி

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கிருபாலு மகராஜ் ஆஸ்ரம வளாகத்தில் உள்ள ராம் ஜானகி கோயிலில் இந்த விபத்து ஏற்பட்டது. 37 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் உள்பட 63 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலகாபாத் நகருக்கு அருகே உள்ள அந்தக் கோயிலில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட இலவச உணவு மற்றும் உடைகளைப் பெறுவதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முயன்றார்கள். அப்போது, நுழைவு வாயில் கதவு தகர்ந்து விழுந்தது. இரும்பினாலான அந்தக் கதவு, அப்போதுதான் நிர்மாணிக்கப்பட்டு வந்தது.

ஒருவர் மேல் ஒருவர் தடுமாறி விழுந்த நிலையில், பின்புறம் இருந்து கூட்டத்தினர் தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருந்ததால் கீழே விழுந்தவர்களால் எழ முடியாமல் போனதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை என்றும், அருகிலுள்ள நகரங்களில் இருந்து மருத்துவ மற்றும் நிவாரணக் குழுவினர் வந்து சேர சிறிது கால தாமதம் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தில் இந்துக் கோயில்களில் ஏற்பட்ட நெரிசலில் 300 பேர் கொல்லப்பட்டார்கள். இதுபோன்ற மேலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.


நித்தியானந்தா விவகாரம் தொடர்கிறது

மக்கள் எதிர்ப்பு
மக்கள் எதிர்ப்பு

தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராக கூறப்படுகின்ற நித்தியானந்தா என்பவர் ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாக காண்பிப்பதாகக் கூறப்படும் காட்சியைக் கொண்ட ஒரு வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவர்களையும், பக்தி என்ற பெயரில் பாமர மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவர்களை கண்டு தங்கள் அரசு சும்மா இருக்காது என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் அருவருக்கத்தக்க காட்சிகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், சமூகத்தை ஊடகம் மேலும் சீரழித்து விட கூடாது என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

இவ்வாறு சாமியார்கள் பிரபலமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பண்பாட்டு ஆய்வாளரான டாக்டர் பரமசிவம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, வைஷ்ணவ, சிவ மடங்கள் சொத்துக்களை காப்பாற்றுவதிலேயே குறியாக இருப்பதாகவும், இதனால் சாமியார்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டதாகவும், மத்திய மற்றும் உயர்தட்டு மக்களிடையே இருக்கும் நுகர்வு வெறியின் ஒரு பகுதியாகவும் இதனை பார்க்கலாம் என்றும் கூறினார். மேலும் ஊடகங்களும் இதில் பெரும் பங்காற்றுவதாகவும், அவர்கள் ஒரே வாரத்தில் ஒரு நபரை உலக மகா சாமியார் என்று பறைசாற்றுவதாகவும், பின்னர் மூன்றே நாட்களில் அதே நபரை பெண் பித்தன் என்று காட்டுவதும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


சட்ட விரோதமாக ஆஸ்திரேலிய செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் கைது

மட்டக்களப்பு
மட்டக்களப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு அண்மையிலுள்ள நாவலடி கடலோரக் கிராமத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணத்திற்கு தயாராகவிருந்ததாகக் கூறப்படும் 21 பேர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்திலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இப்பயணத்தின் நிமித்தம் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இந்நபர்கள் மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறுகின்றனர்.

தகவலொன்றின் பேரில் பொலிசாரும் இராணுவத்தினரும்

இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையொன்றின் போது இந்நபர்களை கைது செய்ததாகவும், அந்த இடத்தில் வாகனமொன்றும், திசை காட்டும் கருவி, கடல் பயணத்திற்கான வரைபடம் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார்.

இந்நபர்கள் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’