தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்துடன் கலந்து வாழும் மாவட்டங்களில் இன்று சில தமிழ் எட்டப்பர்கள் தோன்றியுள்ளார்கள். இவர்கள் இன்று தமது வயிற்று பிழைப்பிற்காக தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவங்களுக்கு உறுவிளைவிக்கின்றார்கள். என ஜ.ம.முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வேட்பாளர்களுக்கு உணர்வுடன் தேர்தல் பணியாற்றும் தமிழர்களை சில பேரினவாத பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு காட்டிக்கொடுக்குமளவிற்கு இவர்களது சுயநலபோக்கு வளர்ந்துள்ளது. இத்தகைய நபர்கள் இன்று கண்டி, கொழும்பு, பதுளை ஆகிய மாவட்டங்களில் செயற்படுகின்றார்கள். இவர்களை தமிழ் மக்கள் அடையாயங் கண்டு கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய, புசல்லாவை, பன்விலை பகுதிகளிலும் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை, மத்திய கொழும்பு, வடகொழும்பு பகுதிகளிலும் மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இத்தகைய முறையில் வயிற்று பிழைப்பிற்காக பேரினவாதிகளுக்கு தரகு வேலை செய்யும் தமிழர்களை நாம் அடையாளங் கண்டுள்ளோம்.
தமிழ் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றும் உணர்வுள்ள தமிழ் தொண்டர்களின் பெயர்விபரங்களை சேகரித்து பேரினவாதிகளுக்கு எமது இனத்தை காட்டிக்கொடுக்கும் ஈனத்தனமான நடவடிக்கைகளில் இந்த தரகர்கள் ஈடுபடுகின்றார்கள். இவர்களுக்கு எதிர்காலம் உரிய பதிலை விரைவில் வழங்கும்.
இன்று வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை ஆகிய அனைத்து பிரதேசங்களிலும் அதிகபட்ச தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். வடக்கு, கிழக்கு பகுதிகளிலே வேறு விதமான சவால்களை தமிழ் கட்சிகள் சந்திக்கின்றன.
ஆனால் தென்னிலங்கையிலே தமிழர்கள் சிறும்பான்மையினராக வாழும் மாவட்டங்களில் நாம் பேரினவாத சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஒரு பக்கத்தில் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமலும், தமிழ் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யவிடாமலும் தடுக்கும் அப்பட்டமான பேரினவாத சட்டவிரோத நடவடிக்கைகளை ஆளுகின்ற அரசாங்கத்தை சார்ந்த பெரும்பான்மை இன வேட்பாளர்கள் முன்னெடுக்கின்றார்கள்.
அதேபோல் எதிர்க்கட்சிகளை சார்ந்த பெரும்பான்மை இன வேட்பாளர்கள் அரசியல் சதிகள் மூலம் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை கவர துடிக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினருமே தமிழ் மக்கள் துன்பப்படும் பொழுது ஒருதுளி கண்ணீரும் வடித்ததில்லை.
இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களின் வாக்குகளை பொறுக்குவதற்காக அலைந்து திரியும் பெரும்பான்மை வேட்பாளர்கள் சிலர் தமிழ் மக்கள் துன்பப்படும் பொழுது எக்காளம் இட்டு சிரித்தவர்களாகும்.
எனவே இவர்களுக்கு விருப்பு வாக்குகளையோ வழங்குவதற்கு தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் எந்தவித காரணமும் கிடையாது. நாங்கள் இப்படி சொல்வதை இனவாதம் என்று சொல்ல இந்த பெரும்பான்மை அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள்.
நான் சொல்வது இன்றைய விகிதாசார தேர்தல் முறையின் கீழே தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை பாதுகாத்துக்கொள்ளும் இன உரிமை கோரிக்கையாகும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’