பெங்களூரு: நித்யானந்தாவுக்கு புகழாரம் சூட்டிய கர்நாடக மூத்த அரசியல்வாதிகள், கலக்கமடைந்துள்ளனர். இதில், காங்.,- பா.ஜ.,- ம.ஜ.த., என்ற பாகுபாடின்றி தலைவர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு சாமியாருக்கு வெண் சாமரம் வீசியுள்ளது அம்மபலமாகி உள்ளது.
நித்யானந்தா, பெங்களூருவிற்கு வந்த புதிதில், கர்நாடகா தமிழர்களில் முக்கிய புள்ளிகள், நித்யானந்தாவை சந்தித்து, தங்களால் பல காரியம் செய்ய முடியும் என்று கதை விட்டனர். அவருக்காக எதையும் செய்வது போல் நடித்தனர். பெங்களூருவிலிருந்து விரட்டி அடித்த பின், மைசூரு ரோட்டிலுள்ள ராம்நகர் மாவட்டம் பிடதிக்கு செல்லலாம் என்று பலர் ஆசைவார்த்தை காட்டினர். அங்குள்ள நிலங்களை வளைத்து போட்டு, பெரிய ஆஸ்ரமம் அமைக்க நித்யானந்தாவுக்கு சிலர் ஆசை ஊட்டினர். பிடதியில் தற்போது அமைந்துள்ள நித்யானந்தா தியான பீடம், விவசாயம் செழித்தோங்கிய பகுதியாகும். இந்த இடங்கள் காவிரி படுகை பகுதியில் அமைந்துள்ளதால், மிகவும் செழிப்பாக விளங்கியது. நித்யானந்தாவின் கண்பார்வைக்கு ஏங்கிய பல நன்கொடையாளர்கள், நிலங்களை தானமாக வழங்கினர். பல ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு சாமியாரே வாங்கினார். பிடதியிலிருந்து மைசூரு ரோடு வரை சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் பல ஏக்கர் நிலத்தை சாமியார் வளைத்து போட்டதாக கூறப்படுகிறது.
நித்யானந்தாவுக்கு, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோதும், தற்போது பா.ஜ. ஆளும் கட்சியாக இருக்கிற போதும், ஏராளமான வி.ஐ.பி.,க்கள் பக்தர்களாக இருந்து வருகின்றனர். முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான முக்கிய புள்ளியின் மனைவியின் உடல் நோயை, சாமி நித்யானந்தா குணப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்ததால் பிடதி ஆஸ்ரமத்திற்கு தேவையான சலுகைகளை அந்த தலைவர் வழங்கியுள்ளார். அவரது மனைவி, சாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.இதேபோன்று தற்போதைய பாரதிய ஜனதா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பலரும், நித்யானந்தாவுக்கு பரம சீடர்களாக இருந்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் எடியூரப்பா, சாமியாரின் காலில் விழுந்து வணங்கினார்.
பாரதிய ஜனதாவின் பெரும்பாலான தலைவர்கள், நித்யானந்தாவுக்கு சாமரம் வீசியவர்கள். ம.ஜ.த., தலைவர்களும் நித்தியானந்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற கதைகள் நிறைய உள்ளன.தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி., பக்தர்களுக்காக சிறப்பு பிரசாதமாக, கேசரிபாத், பொங்கல், புளியோதரை என விதவிதமாக வழங்குவார் நித்யானந்தா. அவரிடம், வி.ஐ.பி.,க்கள் ஆசிர்வாதம் பெற்ற பின், பூ, வாழைபழம், தேங்காய் போன்றவைகளுடன் பிரசாதங்களில் ஏதாவது ஒன்று அதிகளவில் வழங்கப்படும். சில வி.ஐ.பி.,க்கள் வாரம் தவறாமல் சாமியாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களில் பலர், மனு தாக்கல் செய்வதற்கு முன், பிடதிக்கு சென்று, சாமியாரிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர். தங்கள் அலுவலகத்தில் சாமியாரின் ஆளுயர படத்தை வைத்து வணங்கி வந்தனர்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி அந்த படங்களை தூக்கி வீசி எறிந்து விட்டனர். அந்தளவு சாமியார் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது பக்தர் வேஷம் தெரிந்து விடும் பயத்தில், ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கின்றனர்.சாமியாரின் பெயரை சொல்லி பிடதியில் பலரும் நன்றாக பணம் சம்பாதித்தனர். அப்பகுதியிலுள்ள ஹோட்டல்கள், டிராவல்ஸ்கள் போன்றவைகளுக்கு சாமியார் பெயர் வைக்கப்பட்டது. சாமியார் பெயர் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். கடவுள் அனுகிரஹத்தை நேரடியாக பெறலாம் என்று தகவல்கள் பரப்பப்பட்டது.அரசியல்வாதிகளை தொடர்ந்து, கர்நாடகா அரசின் மூத்த அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் போட்டி போட்டு கொண்டு சாமியாரை தரிசனம் செய்வதற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் தற்போது பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’