வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 மார்ச், 2010

செய்தியரங்கம்


 

ஷார்ப்வில்லில் படுகொலை சம்பவம் நடந்து முடிந்த தருணம்
ஷார்ப்வில்லில் படுகொலை சம்பவம் நடந்து முடிந்த தருணம்
தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட கால 'ஷார்ப்வில் படுகொலை'யின் ஐம்பதாவது நினைவு நாள்
தென்னாப்பிரிக்காவில் ஷார்ப்வில் என்னும் இடத்தில் அமைதியாக ஊர்வலத்தில் ஈடுபட்ட கறுப்பினத்தவரை பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் 50வது ஆண்டு நிறைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி, பாஸ் புத்தகங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ஆட்சேபித்து ஷார்ப்வில்லில் மக்கள் ஊர்வலம் நடந்தபோது நிராயுதபாணிகளை பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்றிருந்தனர்.
அதில் 69 பேர் கொல்லப்பட்டார்கள், குறைந்தது 180 பேர்வரை காயமடைந்தார்கள்.
தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டம் சந்தித்த மிகவும் கொடூரமான படுகொலைத் தருணம் அது.
ஷார்ப்வில் படுகொலை சம்பவ நினைவு தினம் பற்றிய விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


ஐ.பி.எல் கிரிக்கெட்: இரண்டு புதிய அணிகள் 70 கோடி டாலர்களுக்கு ஏலம்
உலகில் மிக அதிகமாக பணம் புழங்கும் கிளப் கிரிக்கெட் போட்டியான இந்திய பிரிமியர் லீக் புதிதாக உருவாக்கப்படவுள்ள இரண்டு அணிகளை 70 கோடி டாலர்களுக்கு ஏலம் விட்டு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த லீக் ஆரம்பிக்கப்பட்டபோது எட்டு அணிகளுக்கு நடந்த ஏலத்தின் போது பெறப்பட்ட தொகையை விட இந்தத் தொகை அதிகம்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணி 37 கோடி டாலர்களுக்கும், கொச்சி அணி 33 கோடி டாலர்களுக்கும் ஏலம் போயுள்ளன.
2011ஆம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் இந்தப் புதிய அணிகள் பங்குகொள்ளும்.


யுத்தத்தால் அவயங்களை இழந்தோருக்கு செயற்கை அவயங்களை பொருத்த இந்திய நிறுவனம் உதவி
இலங்கை வந்துள்ள இந்தியாவின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பகவான் மகாவீர் விக்லாங் சகாயதா சமித்தி நிறுவனத்தின் செயற்கை அவயவங்களைப் பொருத்தும் குழுவொன்று மனிக்பாம் ஆனந்தகுமாரசாமி நலன்புரி நிலையத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் பணியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக ஈடுபட்டுள்ளது.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வந்துள்ள இந்தக் குழு, ஒரு மாத காலம் தங்கியிருந்து செயற்படும் என்றும் சுமார் 1200 பேர் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கும் இந்த மனிதாபிமான உதவி கிட்டியுள்ளது. இராணுவத்தின் தடுப்பு பராமரிப்பில் உள்ள பலர் இதற்காக செட்டிகுளம் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள்.
கிளிநொச்சியில் இயங்கிவந்த செயற்கை அவயவங்களைப் பொருத்துகின்ற வெண்புறா நிறுவனத்தின் உதவியோடு செயற்கை அவயவங்களைப் பெற்றிருந்த பலர் யுத்த மோதல்கள் காரணமாக நாட்பட்டு பழுதடைந்த செயற்கை அவயவங்களுடன் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் பலருக்கு தகடுகளினால் ஆன செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்ற சிலர், ஜெய்ப்பூர் நிறுவனத்தின் புதிய செயற்கை அவயவங்கள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருக்கின்றார்கள்.
இது பற்றிய மேலதிகத் தகவல்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கும் பெட்டகத்தில் கேட்கலாம்.


பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு இல்லை: மட்டக்களப்பு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கவலை
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், எதிர்பார்த்த பாதுகாப்பு இதுவரை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சயேட்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் குற்றும் சுமத்துகின்றன.
வேட்பாளர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதில் பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர்கள் சிலருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதுவித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன் செல்வராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
பல தடவைகள் பாதுகாப்பு கோரி பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ள போதிலும், நடமாடும் சேவை மூலம் மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என தமக்கு பதிலளிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான எம். சேகு உசைன் தெரிவித்துள்ளார்.


பிளாஸ்டி குப்பையின் பாதிப்புகள்: விநோதப் படகில் விழிப்புணர்வுப் பயணம்
பிளாஸ்டிக் குப்பைகளால் சமுத்திரங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு ஒன்று ஒரு வித்தியாசமான கடல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
ரீசைக்லிங் என்று சொல்லப்படுகின்ற முறையில் பழைய பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள்கள் 12000க்கும் அதிகமானவற்றை வரிசை வரிசையாக ஒட்டி ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள இரண்டு மிதவைகளைக் கொண்ட இந்தக் பாய்மரப் படகில் தைரியம்மிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவினர் பசிபிக் கடலைக் கடக்கவுள்ளனர்.
பிளாஸ்டிகி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படகு நேற்று சனிக்கிழமை தனது 20,000 கிலோமீட்டர் தூர பயணத்தை சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து ஆரம்பித்தது.
இந்தப் படகு கிட்டத்தட்ட முற்றிலுமாகவே உபயோகப்படுத்தப்பட்டு வீசப்பட்டிருந்த பொருட்களிலிருந்து மீளுருவாக்கப்பட்ட பொருட்களால்தான் அமைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பயணிப்பவர்கள் ஒரே நீரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதற்கான வசதியும், உடற்பயிற்சிக்கான சைக்கிளைச் மிதிக்கும்போது அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகும் வசதியும் இதிலே செய்யப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் இறைந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடலை ஒட்டி வாழும் பறவைகளையும் கடல் வாழ் உயிரிங்களையும் ஆயிரக் கணக்கில் கொன்றுவருகிறன.
தவிர கடலில் விடப்படுகின்ற பிளாஸ்டிக் குப்பைகள் ஒன்று சேர்ந்து பெரும் பெரும் திட்டுக்களாக சமுத்திரத்தில் பல இடங்களிலும் மிதந்துகொண்டிருக்கின்றன. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’