
கடந்த 3.12.2003 ஆம் திகதி இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் எதிரியாகிய மெண்டிஸ் திலகராஜ் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மலசலகூடக் குழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் காணப்பட்ட உடை, செருப்பு மற்றும் குடை ஆகியவற்றைக் கொண்டு இறந்தவர் தமது மகளாகிய இலட்சுமணன் பவானி என பொலிஸாருக்கும் வவுனியா நீதிவானுக்கும் இறந்தவரின் தந்தையாகிய முத்தையா இலட்சுமணன், தாயாராகிய இலட்சுமணன் லீலாவதி, சகோதரியாகிய இலட்சுமணன் செல்வலட்சுமி ஆகியோர் அடையாளம் காட்டியிருந்தனர்.
மெண்டிஸ் திலகராஜ் என்பவரைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது, குற்றத்தை தானே ஒப்புக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்து வவுனியா நீதிவான் எம். இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்செய்தபோது கொலைக்குற்றத்தை ஒப்புக் கொண்ட சந்தேக நபர், சட்டவிதிகளுக்கமைய ஒப்புதல் வாக்குலம் வழங்க முன்வந்ததையடுத்து, நீதிவான் இளஞ்செழியனினால் ஒப்புதல் வாக்குலம் பதிவுசெய்யப்பட்டது.
இறந்த பெண்ணுக்கும் தனக்கும் ஆரம்பத்தில் சாதாரண பழக்கமே இருந்தது என்றும், பின்னர் அப் பெண் தன்னைக் காதலிப்பதாகத் தெரிவித்ததாகவும், இரண்டு வருடங்கள் தமது பழக்கம் தொடர்ந்ததாகவும், அதனையடுத்து தன்னைத் திருமணம் செய்யவேண்டும் என்று இறந்த பெண் தன்னை வற்புறுத்தியதாகவும் அதற்குத் தான் இணங்கவில்லை என்றும் தனது ஒப்புதல் வாக்குலத்தில் மெண்டிஸ் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
திருமணமாகி மனைவி, பிள்ளையுடன் வசிப்பதனால் அவர்களை விட்டுப் பிரிய முடியாது என தெரிவித்தும், இறந்தவராகிய பவானி திருமணம் செய்யுமாறு தொடர்ந்து தன்னை வற்புறுத்தியதாகவும் அத்தகைய வற்புறுத்தலின் பேரில் பாவனையற்ற தனது சீதன வீட்டில் அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியதாகவும் அவ்வாறு தனியாகச் சந்தித்த போது பவானிக்கும், தனக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து பவானி தடியொன்றால் தன்னை தலையில் அடித்ததாகவும் அப்போது அவரது கழுத்தைப் பிடித்து கைகளினால் நெரித்த போது, சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் இறந்தவரின் உடலில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு சடலத்தின் கழுத்தில் கயிறு ஒன்றைக் கட்டி இழுத்துச்சென்று வீட்டின் பின்னால் இருந்த மலசலகூட குழியில் போட்டுவிட்டுச் சென்றதாகவும் எதிரி தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தமது மகள் திடீரென்று காணாமல் போனமை குறித்து பொலிஸாரிடம் இறந்த பெண்ணின் தாயாகிய இலட்சுமணன் லீலாவதி முறைப்பாடு செய்திருந்தார்.
எட்டு மாதங்களின் பின்னர் எதிரியாகிய மெண்டிஸ் திலகராஜுக்குச் சொந்தமான பாவனையற்ற வீட்டு மலசலகூடக் குழிக்குள் மனித எலும்புக்கூடு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டு, பொலிஸானால் நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரது முன்னிலையில் அது மீட்கப்பட்டது.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ. விசுவநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சாட்சிகளை அரச தரப்பு சட்டத்தரணி செல்வி நளினி கந்தசாமி நெறிப்படுத்தினார்.
எலும்புக் கூட்டை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய காலி பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நிரியல்லகே சந்திரசிறி, ஒரு மனிதனின் உடலில் இருக்கவேண்டிய 206 எலும்புகளில் 83 எலும்புகள் மாத்திரமே குறிப்பிட்ட சடலத்தில் இருந்ததாகவும், இறந்தவர் ஓர் இளம் பெண்ணாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவர் வலுவான முறையில் கழுத்து கயிற்றினால் நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பதற்கான தடயங்கள் இருந்ததாகவும், எனினும் கொல்லப்பட்டபோது இறந்தவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாரா என்பது குறித்து கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இறந்த பெண் காணாமல் போயிருந்தமை குறித்து இறந்தவரின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததையும், எதிரிக்குச் சொந்தமான தனியான வீட்டு மலசலக் கூடக் குழியில் இருந்து பெண்ணின் எலும்புக் கூடு, கயிறு, உடை, செருப்பு, குடை என்பன கண்டெடுக்கப்பட்டதையும், சப் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ன தமது சாட்சியில் உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு விசாரணைகளின் போது, எதிரியிடமிருந்து பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குலத்தைப் பதிவு செய்து அப்போது வவுனியா நீதிவானாகக் கடமையாற்றிய எம். இளஞ்செழியனும், வவுனியா மேல் நீதிமன்ற விசாரணையின் போது மன்றில் தோன்றி சாட்சியமளித்தார்.
நீதிமன்ற விசாரணைகளின்போது நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் பதிலளித்த எதிரியாகிய மெண்டிஸ் திலகராஜ் தனது சொந்த விருப்பத்தின் பேரிலும், பாதகமான விளைவுகளைத் தெரிந்து கொண்டும் சுயமாகவே வவுனியா நீதிவானிடம் தான் ஒப்புதல் வாக்குலம் அளித்ததை உறுதிப்படுத்தினார்.
விசாரணைகளின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன், எதிரியாகிய மெண்டிஸ் திலகராஜுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’