வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

சச்சின் கொடுத்த பேட்டை வைத்து பின்னி எடுத்த ஹர்பஜன்- மும்பை அதிரடி வெற்றி

மும்பை: மும்பை யில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங் அபாரமாக ஆடினார். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் பட்டாசாகப் பொறிந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி்க்கும், மும்பை இந்தியன்ஸ்கும் இடையிலான இந்தப் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. முதலில் பேட் செய்தது மும்பை அணி.
வழக்கம் போல சச்சின் அட்டகாசமாக ஆடினார். 43 பந்துகளைச் சந்தித்த சச்சின் 55 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்த பிரேவோ 23 ரன்கள் சேர்த்தார். ஆனால் திவாரி, சதீஷ், போலார்ட் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற அணி சற்று தடுமாறியது.
இருப்பினும் ஹர்பஜன் சிங் களம் இறங்கிய பின்னர் போட்டியே மாறிப் போனது. அட்டகாச பந்து வீச்சாளரான அவர் நேற்று அதிரடி பேட்ஸ்மேனாக மாறினார். டெக்கான் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த அவர் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 49 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அணி 172 ரன்களை எட்ட உதவியாக இருந்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது மும்பை.
பின்னர் ஆட வந்த டெக்கானுக்கு தொடக்கமே சொதப்பலாக இருந்தது. கேப்டன் கில்கிறைஸ்ட் டக் அவுட் ஆகிப் போனார். மிஸ்ரா 13 ரன்களில் வெளியேறினார். கிப்ஸ் சற்று ஆடி 27 ரன்கள் குவித்தார்.
முக்கியமான நபரான சைமண்ட்ஸை 1 ரன்னில் வெளியேற்றியது மும்பை. இக்கட்டான நிலையில் டெக்கான் தவித்தபோது ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 45 ரன்களைக் குவித்தார். ஆனால் அதனால் பயன் ஏதும் இல்லாமல் போய் விட்டது. காரணம் மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் பட் பட்டென்று வெளியேறியதால்.
பேட்டிங்கில் பிரமாதப்படுத்திய ஹர்பஜன் பவுலிங்கிலும் அசத்தினார். முக்கிய விக்கெட்டான கில்கிறைஸ்ட்டை டக் அவுட் செய்த அவர், கூடுதலாக சுமன், ஜஸ்கரன் ஆகியோரையும் வெளியேற்றினார்.
மறுபக்கம் ஜாகிர்கான் தன் பங்குக்கு 3 பேரை அவுட் ஆக்க, டெக்கான் அணி பொத்தென்று விழுந்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த டெக்கான் 131 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணித் தரப்பில் ஹர்பஜனும், ஜாகிர்கானும் தலா 3 விக்கெட்களை வீழ்த்த, மலிங்காவும் தன் பங்குக்கு 3 விக்கெட்களைச் சாய்த்தார்.
பேட்டிங், பந்து வீச்சில் அட்டகாசம் செய்த ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங் பேசுகையில், எனது அதிரடி பேட்டிங்குக்கு சச்சின் தான் காரணம். அவர் கொடுத்த பேட்டை வைத்துதான் ஆடினேன். நல்ல பேட்டை கொடுத்து உதவியதற்காக அவருக்கு நன்றி என்றார் ஹர்பஜன் சிங்.
இந்த வெற்றி மும்பைக்குக் கிடைத்துள்ள தொடர்ச்சியான 3வது வெற்றியாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’