வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 மார்ச், 2010

இலங்கையில் எங்கும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாது; மகிந்த அரசின் மறைமுக திட்டம்: இரா.சம்பந்தன்


இலங்கைத்தீவில் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாது. அதற்கமைவாக மகிந்த அரசானது மறைமுகமான திட்டம் ஒன்றை வைத்து தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருந்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தாயகம், அதற்கான சுய நிர்ணய உரிமை, தன்னாட்சி என்பவற்றை கோருவார்கள். எனவே அதனை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் எடுத்துவருகிறது.

இந்த நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்துவதற்கான செயற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. சிங்கள விவசாயிகள் தெற்கு பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டு அரச நிலங்களில் குடியேற்றப்பட்டார்கள்.

தற்போது பெரிய தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கும், மகிந்த அரசானது சிங்கள வர்த்தகர்களுக்கு அனுமதியளித்துள்ளது. அதன் மூலம் பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

1957 இல் பண்டா – செல்வா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் 13 விழுக்காடாகவிருந்த சிங்கள மக்களின் சனத்தொகையானது 1965 இல் சேனநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது 18 விழுக்காடாகவிருந்தது. தற்போது 25 விழுக்காடாக சிங்கள மக்களின் சனத்தொகை கிழக்கு மாகாணத்தில் அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமானது பின்னர் வடக்கு மாகாணத்திலும் சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழர் தாயகத்தை சிங்களமயப்படுத்தி சிதைக்கும் நோக்கம் கொண்டது என்று தெரிவித்தார்.

அதேவேளை, 1987ல் மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் - ஜே.ஆர். ஜெயவர்த்தன (இலங்கை - இந்தியா) ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு, கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி மக்கள் ஆணையைப் பெறவேண்டும் என்ற திட்டத்தை தோல்வியுறச் செய்யும் நோக்குடனேயே அரசு திட்டமிட்ட குடியேற்றங்களை கிழக்கில் மேற்கொண்டு வருகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’