போப்பாண்டவர் பெனடிக்ட் |
அமெரிக்கப் பாதிரியார் ஒருவரின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் போப்பாண்டவர் பெனடிக்ட் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை வத்திகான் பீடம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு
பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை.
பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை.
போப்பாண்டவர் பெனடிக் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமர்சகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில் போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்றுகூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மர்ஃபி விவகாரம் சம்பந்தமாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதையும், தான் ஏன் அவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் போப்பாண்டவர் விளக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
வத்திகான் மறுப்பு
எப்படியாவது போப்பாண்டவரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகின்ற ஒரு முயற்சி இது என்று கூறி, வத்திகானின் உத்தியோகபூர்வ செய்தித்தாள் போப்பாண்டவர் சார்பாக வாதிட்டுள்ளது.
தலையங்கம் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை போப்பாண்டவர் பெனடிக்ட் எப்போதுமே வெளிப்படையாகவும் உறுதியாகவும், தீவிரமாகவும் கையாண்டுவந்துள்ளார் |
பாதிரியார் மர்ஃபி விவகாரத்தை மூடிமறைக்க எந்த ஒரு முயற்சியும் நடக்கவில்லை. அவர் தொடர்பில் சிவில் அதிகாரிகள் விசாரணை செய்துவிட்டு அவர்கள்தான் புகாரில் முகாந்திரம் இல்லை என்று விவகாரத்தைக் கைவிட்டிருந்தார்கள் என்று அத்தலையங்கம் தெரிவிக்கிறது.
பாதிரியார் மர்ஃபியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபடியாலும், அவர் தனது பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தபடியாலும், அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்கள் இதுநாள் வரையில் அயர்லாந்து ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் சம்பந்தப்பட்ட மறை மாவட்டங்களில்தான் மையம் வந்துகொண்டிருந்தன. ஆனால் தற்போது சிறார் பாலியல் துஷ்பிரயோக பாதிரியார்களை காப்பாற்றும் முயற்சிகளில் பங்கு இருந்தது என்ற குற்றச்சாட்டுகள் வத்திகான் வரைக்கும் வந்துவிட்டன. போப்பாண்டவரையும் இந்த விவகாரம் விட்டுவைக்கவில்லை என்று தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’