வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 மார்ச், 2010

கஜேந்திரன் இன்றைய யாழ். பத்திரிகையில் வழங்கிய விளம்பர கருத்து தொடர்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனின் விளக்கம்

தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையாகச் செயற்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையுடன் ஆறு ஆண்டுகளை கஜேந்திரன் ஏன் செலவழித்தார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிறேமச்சந்திரன் விடுத்துள்ள செய்திஅறிக்கை:

தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையாகச் செயற்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையுடன் ஆறு ஆண்டுகளை கஜேந்திரன் ஏன் செலவழித்தார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (27-03-2010) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய நாளிதழ் ஒன்றிற்கு கஜேந்திரன் தனது தேர்தல் பரப்புரை விளம்பரம் ஒன்றின் ஊடாக வழங்கியுள்ள கருத்துத் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'கடந்த 30 வருட கால தமிழ் தேசிய அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை ஒரு நாள் கூட தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையாகச் செயற்படவில்லை.
2001ம் ஆண்டு பாவமன்னிப்புக் கொடுத்து கூட்டாக அமைக்கப்பட்டதன் பின்னரும் கூட இவர்கள் மனச்சாட்சியுடன் செயற்படவில்லை.
நேர்மையாக செயற்பட்டிருந்தால் இன்று நாம் சந்தித்த மாபெரும் அழிவு தடுக்கப்பட்டிருக்கும். எமக்கு நல்லதொரு தீர்வு நிச்சயம் கிடைத்திருக்கும்.
இவர்களே இன்று உன்னத தமிழ் தலைவர்களாக எமக்கு சித்திரித்துக் காட்டப்படுகின்றார்கள்.'
மேற்குறித்த கருத்துக்களை பார்க்கின்ற போது அவரது உண்மையான நிலைப்பாடு வெளிப்படுகின்றது. அவரது பேச்சும் செயலும் வேறு வேறாகவே உள்ளதை மேற்குறிப்பிட்ட அவரது கருத்துக்களின் ஊடாகவே மக்களால் விளங்கிக் கொள்ளமுடியும்.

அவர் குறிப்பிடுவது போன்று நேர்மையற்ற தலைமையைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் ஏன் காலத்தைக் கடத்தினார்.
கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்று ஒரு சில நாட்களிலேயே கூட்டமைப்பினை இனங்கண்டு அதில் இருந்து உடனடியாவே அவரால் வெளியேறியிருக்க முடியும். அவ்வாறான இதயசுத்தியுடன் கூடிய, மக்களுக்காவும் தேசியத்திற்காகவும் தன்னையே அர்ப்பணித்த ஒரு புனிதரான அவர் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு ஏன் மிகவும் பிரயத்தனப்பட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுக்கொள்வதற்காக அவர் மீண்டும் மீண்டும் முயன்று அது பயனற்று போகவே வேறு குழுவாகப் பயணிக்க முடிவெடுத்தார் என்பது உலகம் அறிந்த விடயம்.
தமிழ் தேசியத்திற்காக வெவ்வேறு வழிகளில் உழைத்தவர்களே இன்று கூட்டமைப்பில் ஒன்று சேர்ந்து பயணிக்கிறார்கள். கூட்டமைப்பின் தலைமைக்கு பாவமன்னிப்புக் கொடுக்கும் அளவிற்கு 'இரட்சகர்' பட்டம் அவருக்கு யார் கொடுத்தது? கூட்டமைப்பினை இழிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பின் தலைமைக்கு பாவமன்னிப்புக் கொடுத்ததாக திமிர்த்தனமான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அவரது அரசியல் முதிர்ச்சியின்மை வெளிப்படுகின்றது.
நேர்மையாக செயற்பட்டிருந்தால் இன்று நாம் சந்தித்த மாபெரும் அழிவு தடுக்கப்பட்டிருக்கும், எமக்கு நல்லதொரு தீர்வு நிட்சயம் கிடைத்திருக்கும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உண்மையில் திரு சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா ஆகியோரும் இவர்களைப் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்.
ஆனாலும் நாங்கள் மேற்குலக நாடுகள், இந்தியா, ஐக்கியநாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இலங்கை அரசுடன் கூட வன்னிப் போரை நிறுத்தும்படி முடிந்தவரையில் பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.
ஆனாலும் அவை எதுவும் கைகூடவில்லை என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். இந்த இடத்தில் எங்கள் மீதான குற்றச் சாட்டுக்களை முன்வைத்தவர்களும் எங்களைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்,
இவர்கள் போரை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை முன்வைத்தார்கள்?
இவர்கள் வெளிநாட்டு சக்திகளுடன் பேச்சுக்களில் ஈடுபட என்ன தடை இருந்தது?
இவர்கள் போரை நிறுத்துவதற்கான எத்தனை ஆலோசனைகளை ஏனைய அங்கத்தவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்?
இந்தக் கேள்விகளுக்கான பதில் என்பது ஒன்றுமே இல்லை என்பது மட்டும் தான்.
கஜேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக் குழுவின் தலைவராகவும் பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வெளிவிவகாரக் குழுவின் அங்கத்தவர்களாகவும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் வெளிவிவகாரக் குழு தானே வெளிவிவகாரங்களைக் கையாண்டு அவர்கள் பாணியில் சொல்வதானால் வன்னி மக்களை காப்பாற்றி, போரை நிறுத்தி நிச்சயமான இறுதித்தீர்வை எட்டியிருக்க வேண்டும்.
எமது அரசியல் பயணம் இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களது அர்ப்பணிப்புக்களையும் மக்கள் கொடுத்த விலைகளையும் கருத்திலெடுத்தே நேர்மையுடன் பயணிக்கும் எமது பயணத்திற்கு இவ்வாறான அரசியல் வங்குரோத்துக்கள் எதுவும் தடைபோடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

என்றும் சுரேஷ் பிமேறச்சந்திரன் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’