வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 மார்ச், 2010

செய்தியறிக்கை


 

அண்மையில் சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பேரிழப்பு
அண்மையில் சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பேரிழப்பு
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலி நாட்டில் புதிய அதிபர் பதவியேற்பு
சிலி நாட்டின் புதிய அதிபராக செபாஸ்டியன் பினெரா அவர்கள் இன்று பதவியேற்றிருக்கிறார். மிக மோசமான நிலநடுக்கத்தால் சிலி நாடு பாதிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் இவருடைய இன்றைய பதவியேற்பு நடந்திருக்கிறது.
இவரது பதவியேற்பு வைபவம் நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர், கணிசமான நிலநடுக்கங்கள் நாட்டின் சிலபகுதிகளில் உணரப்பட்டது.
இவற்றில் ஒரு நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோளின்படி 7.2 ஆக இருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கங்களின்போது கட்டிடங்கள் ஆட்டம் கண்டதாகவும் அவற்றில் குடியிருந்த பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்ததாகவும் சிலி நாட்டின் தலைநகர் சாந்தியாகோவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சிலியின் அரசியலில் கடந்த இருபதாண்டுகளாக நிலவி வந்த இடதுசாரிகளின் ஆதிக்கத்தை பினேராவின் தேர்வு முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது.

ஹமாஸ் பிடியிலிருந்து பிரிட்டிஷ் ஊடகவியலாளர் விடுவிப்பு
விடுவிக்கப்பட்டுள்ள மார்டின்
ஹமாஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பால்  மார்ட்டின்
மத்திய கிழக்குப்பகுதியில் காசா பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம், கடந்த ஒருமாத காலமாக தான் பிடித்துவைத்திருந்த பிரிட்டிஷ் ஊடகவியலாளரை விடுவித்திருக்கிறது. இந்த ஊடகவியலாளர் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஹமாஸ் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இஸ்ரேலுடன் ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீன நபர் ஒருவர் தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித் துக்கொண்டிருந்தபோது பால் மார்டின் என்கிற இந்த ஊடகவியலாளர் ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை மார்டின் மறுத்திருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காசா பிராந்தியத்தில் ஹமாஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு அந்த அமைப்பு கைது செய்த முதல் வெளிநாட்டவர் மார்டின் தான் என்று நம்பப்படுகிறது.

கிரேக்கத் தலைநகரில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன
ஏதன்ஸில் பெரும் ஆர்ப்பாட்டங்கள்
ஏதென்ஸில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன
கிரேக்க தலைநகர் ஏதன்ஸில், அரசாங்கத்தின் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடந்துள்ளன.
கற்களை வீசி சில கட்டிடங்களுக்கு சேதங்களை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் செய்தனர்.
ஒரு வார காலத்துக்குள் இரண்டாவது தடவையாக லட்சக்கணக்கான தொழிலாளர்களால் நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியே இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமாகும்.
செலவீன வெட்டுக்கள் குறித்த கடுமையான மக்களின் ஆத்திரத்துக்கு மத்தியிலும், தமது பாரிய கடனை தாம் குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
நாடெங்கும் போக்குவரத்து மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைககள் மாத்திரமே நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
முகேஷ் அம்பானி
உலகப் பணக்காரர்களின் வரிசையில் முகேஷ் அம்பானி
இந்தியாவிலிருக்கும் பில்லியனர்கள் எனப்படும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்க சஞ்சிகையான போர்ப்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.
2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. இது 2009 ஆம் ஆண்டு 49 ஆக உயர்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு பில்லியன் என்பது நூறுகோடி.
போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி, ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் 25 பெரும் பணக்காரர்களில் பத்து இந்தியர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பெரு நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், அவர் தான் இந்தியாவின் அதிகபட்ச பணக்காரர் என்றும் போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எக்குத்தொழிலில் உலகின் பெரும் வர்த்தகரான லக்ஷ்மி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படு கிறது. இவர் தனது வர்த்தகத்தை மேற்குலகில் நடத்தி பெரும் பொருள் ஈட்டியிருந்தாலும் தனது இந்திய குடியுரிமையையும் கடவுச்சீட்டையும் தொடர்ந்து வைத்திருப்பதால் இவர் இந்தியராகவே கருதப்படுகிறார்.
இவர்கள் இருவருமே, உலகின் பத்து பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். இதில் அம்பானி நான்காவது இடத்திலும் மிட்டல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.     

செய்தியரங்கம்
 

சரத் பொன்சேகா மீது இராணுவ விசாரணை
சரத் பொன்சேகா மீது இராணுவ விசாரணை
சரத் பொன்சேகாவை விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார்.
அவற்றின் நீதிபதியாக ஒரு ரியர் அட்மிரல் இருப்பார். அவருக்கு துணையாக மூன்று மேஜர் ஜெனரல்கள் செயற்படுவார்கள்.
சீருடையில் இருந்தபோதே அவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுக்களை ஒரு நீதிமன்றம் விசாரிக்கும்.
இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பில் அவர் விதிகளை மீறியதாக கூறுப்படும் 4 குற்றச்சாட்டுக்களை மற்றொரு நீதிமன்றம் விசாரிக்கும்.
சரத்பொன்சேகா அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அவர் மீது சுமத்தப்படும்.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் முழுமையான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. அத்துடன் அவர் மீதான விசாரணைகள் மூடிய அறையில் வெளியாருக்கு அனுமதி இல்லாத நிலையில் நடத்தப்படும்.
தான் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என்று சரத் பொன்சேகா கூறிவருகிறார்.
சட்டத்தரணிகளை அமர்த்திக் கொள்ள அனுமதி
சொந்த்ட சட்டத்தரணிகளை வைத்துக் கொள்ள சரத் பொன்சேகாவுக்கு அனுமதி
இந்த வழக்குகளில் பொன்சேகா அவர்கள் தனது சொந்த சட்டத்தரணிகள் மூலம் வாதாடலாம் என்றும், விசாரணைகளின் குற்றவாளியாக அவர் காணப்படும்  பட்சத்தில், அதனிலும் உயரிய சிவில் நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்யவும் முடியும் என்றும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் பிபிசியிடம் கூறினார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகள் வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
இந்த விசாரணைகளின் முடிவுகள் சரத் பொன்சேகாவுக்கு எதிராக போகும் பட்சத்தில் ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால், அவர் தேர்தல் பிரச்சார காலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சித்ததாகவும், சரத் பொன்சேகா மீது மூத்த அதிகாரிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள். அவருக்கு எதிராக சிவில் நீதிமன்ற வழக்கும் காத்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதனை நிராகரித்துள்ள அவர், இன்றுவரை இராணுவ புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க கோபத்துடன் மறுத்து வருகிறார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், ஏப்ரல் கடைசியில்தான் அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்ப அழைப்பு
ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்பு
ஊடகவியலாளர்களை பாதுகாக்க அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரச தரப்பினரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்புகளுக்கு பிறகு அரசின் தலைமை வழக்கறிஞரான மோஹன் பீரீஸ் அரசுக்கு ஊடகவியலாளர்கள் தேவை என்றும், இலங்கையைவிட்டு வெளியேறி நாடுகடந்த நிலையில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு மீண்டும் வந்து பரஸ்பர மரியாதையுடன் இருக்கும் ஒரு சூழலில் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும், கொழும்பு சென்றுள்ள ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
அப்படியாக நாடுகடந்த நிலையில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பினால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கும் என்று தமது தரப்பிலிருந்து ஒரு உத்திரவாதம் இருக்க வேண்டும் எனவும் மோஹன் பீரீஸ் தெரிவித்ததாகவும் அந்தக் குழுவினர் கூறுகிறார்கள்.
தொடர்ந்தும் பயத்தில் ஊடகவியலாளர்கள்
லசந்த விக்ரமதுங்க
கடந்த ஆண்டு கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி
இலங்கையில் ஊடகத்துறையினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதை முன்னர் இலங்கை அரசு மறுத்துவந்துள்ளது.
கடந்த ஆண்டு அங்கு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டது தொடர்பில் ஆறு இராணுவத்தினரை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக இலங்கை அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனாலும் ஊடக்த்துறை தொடர்பான செயற்பாட்டுக் குழுக்களால் நடத்தப்படும் மதிப்பீடுகளில் மிகவும் குறைந்த மதிபெண்களே பெறுகின்றன. எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஊடகவியலாளர் மாயமான முறையில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார்.
அவரை இலங்கை அரசைத் தவர வேறு யாரும் கடத்தியிருக்க முடியும் என்று தான் கருதவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் விளம்பரம் தேடும் நோக்கில் அவர் எங்காவது மறைந்திருக்கலாம் என்று அரசு கூறுகிறது.
அப்படி காணாமல் போன அந்த ஊடகவியலாளர் பணி செயத நிறுவனத்தின் ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் நாடுகடந்த நிலையில் வாழும் ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பி பாதுகாப்பான சூழலில் பணியாற்ற வேண்டும் என்றால், அவர்கள் இலங்கை அரசிடமிருந்து உறுதியான வார்த்தைகள் மட்டுமல்ல செயற்பாடுகளையும் எதிர்பார்பார்கள்.

இலங்கையின் கிழக்கு பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை கலைப்பு
பதவி வலகியுள்ள துணை வேந்தர் பத்மநாதன்
பதவி விலகியுள்ள துணை வேந்தர் பத்மநாதன்
இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி என் பத்மநாதன் தனது பதவியலிருந்து ராஜனாமா செய்துள்ளதையடுத்து மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை இன்றுடன் கலைக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே மாணவர் பேரவை பிரதிநிதிகளாக அங்கம் வகித்தவர்கள் உட்பட சில மாணவர்கள் நேற்று துணை வேந்தரை சந்தித்து பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும்
இதன் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் கூறப்படும் நிலையிலேயே பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது
துனை வேந்தர் பதவி விலக வேண்டும் என குறிப்பிபட்ட மாணவர் பேரவை பிரதிநிதிகளால் கொடுக்கப்டப்ட அழுத்தத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என அநேகமான மாணவர்கள் இன்று எழுத்து மூலம் பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர்
அநேகமான மாணவர்களின் வேண்டுகோளின் பேரிலேர்யே பல்கலைக்கழக மாணவர் பேரவை கலைக்க தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணை வேந்தர் கலாநிதி கே பிரேம்குமார் கூறுகின்றார்

உலகக் கோப்பை ஹாக்கி-இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி
உலகக் கோப்பை ஹாக்கி இறுதி ஆட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது. இன்று மாலை இடம் பெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி இங்கிலாந்து அணியை 4-1 என்கிற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
புதுடில்லியில் நடைபெற்று வரும் ஆடவர்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முதல் 11 நிமிடங்களிலேயே ஜெர்மனி இரண்டு கோல்களை போட்டு போட்டியை தன்வசப்படுத்திக் கொண்டது. அந்த அணியின் சார்பில் யான் மார்கோ மோட்டங்கும் ஆலிவர் கார்ணும் இந்த முதல் இரு கோல்களைப் போட்டனர்.
இங்கிலாந்து அணியின் சார்பில் போடப்பட்ட ஒரே கோலை ரிச்சர்ட் ஸ்மித் அடித்தார்.
கடைசி இடத்தில் பாகிஸ்தான் அணி
உலகக் கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான் படுதோல்வி
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு கடைசியிடம்
இதனிடையே இதுவரை இல்லாத வகையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி இடைத்தை பெற்றுள்ளது. போட்டியில் பங்குபெற்ற 12 அணிகளில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. கடைசி இடத்துக்கான போட்டியில் கனடா நாட்டு அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று தேசிய அணியிலிருந்து விலகியுள்ளனர். அந்நாட்டு அணியின் தேர்வுக் குழுவினரையும் அணியின் நிர்வாகக் குழுவினரையும் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் கடைசி இடத்தை தமது அணி பெற்றுள்ளது வெட்கக்கேடான ஒரு விடயம் என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவரான காசிம் ஜியா கருத்து வெளியிட்டுள்ளார்.
தமது அணியின் தோல்வி குறித்து முழுமையான ஒரு விசாரணை நடைபெறும் எனவும் காசிம் ஜியா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து நாட்டு அணிகள் மோதுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’