வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 மார்ச், 2010

தேர்தல் களம்: மக்களை ஏமாற்றும் முயற்சியில் மீண்டும் த.தே.கூட்டமைப்பு

தாயகக்குரல்
இலங்கையின் சகல பகுதிகளிலும் பொதுத் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த கோரிக்கையை அரசியல் கட்சிகள் சிறிதேனும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆணையாளர் விடுத்த அறிவித்தலையும் மீறி தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகள், உருவப்படங்கள் என்பன பட்டி தொட்டியெல்லாம் காட்சியளிக்கின்றன. தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய தேர்தல் விளம்பரங்களை அகற்றும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியில் பொலிசாருடன் மேலதிக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடெங்கும் தேர்தல் விளம்பரங்களை அகற்றும் பணிக்கு 22 மில்லியன் ரூபாவை தேர்தல்கள் திணைக்களம் ஒதுக்கியுள்ளது. 

தேர்தல்கள் ஆணையாளரின் கோரிக்கையை அரசியல் கட்சிகள் குப்பையில் எறிந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கபே அமைப்பு தேர்தல் சட்டங்களை கடினப்படுத்தவேண்டிய பொறுப்பு ஆணையாளருடையதாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 7500க்கு மேற்பட்ட வேட்பாளர்களினால் சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக 20.5 கோடி ரூபாய் செலவிடப்படும் என முன்னணி சுற்றாடல் அமைப்பொன்று கணிப்பீடு செய்துள்ளது. கலர் சுவரொட்டிகளில் அசிட் சேர்ந்திருப்பதால் சுற்றாடல் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

வெவ்வேறு கட்சிகளிடையே போட்டிகள் இருப்பது சகஜம். ஆனால் இங்கு ஒரே கட்சிக்குள்ளேயே விருப்பு வாக்குகள் பெறுவதில் கடுமையான போட்டியும் அதனால் வன்முறைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் அதிகரிக்கவும் வன்முறைகள் அதிகரிக்கவும் தற்போதைய தேர்தல் முறையில் கட்சிக்குள்ளே விருப்பு வாக்குமூலம் உறுப்பினரை தெரிவுசெய்தல் என்பதும் ஒரு காரணமாகும். தற்போதைய தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தால் கூறப்படும் காரணங்களில் விருப்பு வாக்கு முறை ஒழிக்கப்படவேண்டும் என்பதும் ஒன்றாகும். இந்த விருப்பு வாக்கு முறையால் கட்சிக்குள்ளேயே குழப்பங்கள் நேருவதை தவிர்க்கமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையுடைய பிரதான கட்சிகள் பல வாக்குறுதிகளை தாராளமாக அள்ளி வீசுவது ஒருபுறம் இருக்க பிராந்தியக் கட்சிகளும் வாக்குறுதிகளை தாராளமாக அள்ளி வீசுகின்றன.

இந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலம்மிக்க பாராளுமன்றத்தை அமைப்போம் என ஆளும் ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி தெரிவிக்கிறது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் தாங்களே ஆட்சி அமைக்கப் போவதாக தெரிவிக்கிறது. தெற்கில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

வடக்கு கிழக்கில் நிலைமை மாறுபட்டு காணப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பொதுத் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கமுடியாது. வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. ஏனைய கட்சிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அதேவேளை வடக்கு கிழக்கின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் அரசுடன் இணைந்ததற்கு கூறும் காரணம் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியை மேம்படுத்தவேண்டும் என்பதே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரங்களில் ஏகபிரதிநித்துவம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி என்ற பதங்கள் அடிக்கடி கேட்கின்றன.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த வேண்டுமானால் தமிழ் மக்கள் அதிகப்படியான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கவேண்டும். இதன்மூலம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்கமுடியும் என இரா சம்பந்தன் தெரிவிக்கிறார். ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை தயாரித்துள்ளதாகவும் சம்பந்தன் தெரிவிக்கிறார்.

ஜனநாய நடவடிக்கைகளின் ஊடாக எமது இனத்தின் விடுதலையை சுயநிர்ணய அடிப்படையில் வென்றெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணைவழங்குமாறு மக்களிடம் கோருவதாக வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.

சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்.

தமிழரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புவரை கடந்த 60 வருடங்களாக இவர்கள் மக்களாணை கேட்டு மக்களும் இவர்களுக்கு ஆணையை வழங்கியிருந்தனர். இதுவரை இவர்கள் சாதித்து என்ன என்ற கேள்வியை மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். மக்களுக்கு அகதி வாழ்க்கையை பெற்று கொடுத்ததுதான் இவர்கள் சாதனை.

வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் புலிகளின் அழிவுக்குப் பின்னர் பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறு விட்டதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் அரசியல்ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வந்திருக்கிறோம். தவறுகளை உணர்ந்து திருந்தாவிட்டால் எமது இனம் எம்மை குப்பைக் கூடைக்குள் வீசிவிடும் என்று கடந்த ஆண்டு யூன் மாதம் வினோநோகராதலிங்கம் தெரிவித்திருந்தார்.

இவர்கள் மாத்திரமல்ல இரா சம்பந்தன் அண்மையில் பத்திரிகைகளுக்கு விடுத்த செய்தியில் 1994ம்  ஆண்டு மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்படடுவிட்டன என்று தெரிவித்திருக்கிறார். கிடைத்த சந்தர்ப்பங்களை தவற விட்டவர்கள் இப்போது மீண்டும் மக்களிடம் ஆணைகேட்டு வருகின்றனர்.

கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமை பற்றி பேசுகின்றனர். இவர்கள் கூறும் சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்வதா அல்லது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா என்பது பற்றி எதுவும் கூறாமல் வெறுமனே சுயநிர்ணய உரிமை எனக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தன் திருமலையில் நடந்த பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றைக் காண்பதற்கான சாத்தியக்கூறை ஆராய்வதுதான் ஒஸ்லோ பிரகடனம். எனவே சமஷ்டி அடிப்படையில் தீர்வுத்திட்டம் கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்டிருந்தால் அந்த தீர்வை மக்கள் முன்வைத்து மக்கள் ஆணையைக் கேட்காமல் ஏன் ஆளுக்கு ஆள் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் என்று வாக்கு கேட்கவேண்டும். அப்படி தொடர்ந்து கேட்பது மக்களை ஏமாற்றும் முயற்சியேயாகும்.

10.03.2010 தாயகக்குரல

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’