தலைமைப் பதவிப் பிரச்சினை-- அழகிரி |
திமுகவில் கட்சித் தலைவர் கருணாநிதிக்குப் பின்னர் யார் தலைவர் என்பது குறித்த சர்ச்சை முற்றுவதாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டை ஆளும் திமுகவில் மீண்டும் வாரிசுப் போர் தீவிரமடைந்திருப்பது போன்று தோன்றுகிறது. முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான அழகிரி, வாரமிருமுறை தமிழ் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கருணாநிதிக்குப் பிறகு தான் எவரையும் தலைவராக ஏற்க முடியாது எனக் கூறியிருக்கிறார்.
87 வயதான கருணாநிதி தான் அரசுப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்று தீவிர சமூகப்பணிகளில் இறங்கப்போவதாக அண்மையில் அறிவித்ததிலிருந்து அடுத்த முதல்வர் யார், திமுக தலைவர் யார் என்பது குறித்த ஊகங்கள் இந்திய ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. நீண்டகாலமாக அழகிரியின் தம்பி ஸ்டாலின் தான் திமுகவில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார், கடந்த ஆண்டு மே மாதத்தில் அவர் துணை முதலமைச்சராகவும் ஆனார்.
எனவே அரசியலிலிருந்து ஓய்வு என்றவுடன் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்ற முடிவுக்கு பலரும் வந்தனர்.
அழகிரி எதிர்ப்பு
ஆனால் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, மதுரையில் அளித்த ஒரு பேட்டியில் நான் கலைஞரை ஓய்வு பெறவிடமாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதன் பிறகும் ஒரு முறை ஓய்வு பெற இருப்பதை உறுதிப்படுத்திய கருணாநிதி அண்மையில் நடந்த ஒரு விழாவில் தான் ஓய்வு பெறுவது தனது சொந்த விஷயம் என்றார்.
கடைசியாக நடந்த திமுக பொதுக்குழுவிலும் புதிய தலைமை பற்றி தீர்மானம் எதுவும் இயற்றப்படவில்லை.
இந்நிலையிலேயே, இன்று ( புதனன்று) இங்கு வெளியான சஞ்சிகை பேட்டியில அழகிரி, பெரியார், அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் தலைவர் கலைஞர் மட்டுமே எனக்குத் தலைவர்!. தலைவர் கலைஞர் இருக்கும்போது, மற்றவர்களைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், தலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை எனக் கூறியிருக்கிறார்.
கருணாநிதி கருத்து
பென்னாகரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருந்த முதல்வரிடம் அழகிரி பேட்டி குறித்து கேட்டபோது, இது குறித்து அழகிரியிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.
தொடர்ந்து உங்களுக்கு பிறகு யாருக்கும் திறமை இல்லை என்பதுபோல கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டபோது, அவர் எனக்குப் பிறகு என்பது எந்த ஆண்டு முதல் என்று எனக்கே தெரியாது என்று பதிலளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’