வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 மார்ச், 2010

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் த.தே.கூட்டமைப்பையும் இலங்கை அரசு அழிக்க முற்பட்டிருக்கிறது : செல்வம் அடைக்கலநாதன்

இலங்கை அரசு தமிழ் தேசியத்தை நேசித்த பலரை படுகொலை செய்ததுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தற்போது போராடி வரும் ஒரே ஒரு அமைப்பான தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழித்து விடுவதற்கும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட தலைமை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
விடுதலைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த போராளிகளதும் பொதுமக்களின் தியாகங்களையும் நாம் மனதில் நிறுத்தியவாறே செயற்பட வேண்டும். அவர்களின் விடுதலை வேட்கையை நாம் மனதில் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
விடுதலையை நெஞ்சில் நிறுத்தி உயிர்த்தியாகம் செய்த போராளிகளின் கனவுகளை நனவாக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை அர்ப்பணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பயங்கரவாத அரசானது எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்களையும் பிரதேச சபை உறுப்பினர்களையும் படுகொலை செய்து அரசியல் ரீதியான எமது போராட்டங்ளையும் நசுக்கியது மாத்திரமின்றி வடக்கு கிழக்கில் தமிழர்களின் பெரும் அரசியல் சக்தியாக விளங்குகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழித்து விடுவதற்கும் திட்டம் தீட்டி செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மிகவும் அதிகப்படியான அரசியல் கட்சிகள் சுயேட்சை குழுக்களை  இலங்கை அரசு களமிறக்கியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசியத்திற்கு எதிரான வாக்கு. உயிர் நீத்த போராளிகளின் ஆத்மாக்களுக்கும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் ஆத்மாக்களுக்கும் எதிரான வாக்கு என கருதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதன் சின்னமான வீட்டுக்கு வாக்களித்து தமிழினத்தின் தன்மானத்தை காப்பாற்றுங்கள் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் உரையாற்றும் போது,
 தற்போதைய யதார்த்தமான சூழலை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும், இந்த அரசாங்கத்தின் கபட நாடகங்களை கண்டு தமிழ் மக்கள் ஏமாற்றமடைய கூடாது எனவும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் உரையாற்றும போது,
 தந்தை செல்வா கேட்டதையே பிரபாகரனும் கேட்டார் அதையேதான் நாங்களும் கேட்கிறோம் இதையேதான் ஜக்கிய நாடுகள் சாசனமும் கூறுகின்றது ஒரு இனத்திற்கான உரிமையை யாராலும் மறுக்க முடியாது இது கொடுக்கப்படவேண்டிது என தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா உரையாற்றுகையில்,
 கடந்த கால வரலாற்றில் தமிழ் தேசிய உரிமைக்காக போராடியவர்களை இந்த அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்ததையும், இதற்கு பயந்து யாரும் எமது போராட்டத்தை நிறுத்தி விடவில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து போராடுவோம் வெற்றி பெறும் வரை போராடுவோம். இதற்கான ஆணையை நீங்கள் எங்களுக்கு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான பொன். செல்வராசா, த.சிவநாதன், சி.யோகேஸ்வரன், க.ஆறுமுகம், சத்தியநாதன், அரியநேந்திரன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’