-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 2 மார்ச், 2010
வரலாறுகளின் துணை கொண்டு தொடர்ந்து போராடினால் தமிழர்களுக்கு விடுதலை நிச்சயம்- ஜெஸி ஜாக்சன்
லண்டன்: கடந்த கால வரலாறுகளின் துணை கொண்டு தொடர்ந்து போராடினால் தமிழர்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க மனித உரிமை ஆர்வலரும், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கமானவருமான பாதிரியார் ஜெஸி ஜாக்சன்.
லண்டனில் நடந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டின் இறுதி நாளில், ஜெஸி ஜாக்சன் கலந்து கொண்டு தமிழர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து வந்த இந்த மாநாடு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. மாநாட்டில் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் பேரவை அமைப்பினர், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். மாநாடு குறித்தும் விவாதித்தனர். அவர்களுக்கு கார்டன் பிரவுன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு விருந்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டவும், மனித உரிமை ஆர்வலரும், அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நெருக்கமானவருமான கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜெஸி ஜாக்சன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை நிறுத்தக் கூடாது.
தென் அமெரிக்க மக்களும், தென் ஆப்பிரிக்க மக்களும் போராடி தமது சுதந்திரத்தைப் பெற முடியுமென்றால் ஏன் தமிழ் மக்களால் அது முடியாது. தொடர்ந்து போராடினால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடையலாம் என்றார் ஜாக்சன்ய
மேலும், அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக தாம் மேற்கொண்ட போராட்டங்களை எடுத்து விளக்கிய அவர், விடுதலைப் பாதை கடினமானது. ஆனால், கடந்த வரலாறுகளைக் கொண்டு தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
கொழும்பில் சிங்களர்கள் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில், உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கலந்து கொண்டதைக் கண்டித்து கொழும்பில் சிங்களர்கள் கூடி இங்கிலாந்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஜபக்சேவுக்கு ஆதரவான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலர் கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
'பொன்சேகா'-இணையதளத்துக்கு இலங்கை தடை:
இதற்கிடையே இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலைச் செய்யக் கோரி ஆதரவு திரட்டும் பணிக்காக தொடங்கப்பட்ட புதிய இணையத் தளத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
www.freesarathfonseka.com என்னும் பெயரில் தொடங்கப்பட்ட அந்த இணையதளம் பொன்சேகா விடுதலைக் கோரி கையெழுத்து திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
இந்த இணையத் தளத்தை இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வா, நேற்று தான் தொடங்கி வைத்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’