போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் எதிர்காலத்தில் வளமான வாழ்க்கையை வாழக் கூடிய சூழ்நிலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
நல்லூர் யாழ்ப்பாணத்தில் இன்று (22) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது மக்களுடைய நீண்ட கால எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க முன்வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இத் திட்டத்தை ஏனைய தமிழ் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு இப்பணியகத்தின் மூலம் நல்லதொரு எதிர்காலம் உள்ளது எனவும் அவற்றை அவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அரச சேவைகளைப் பரவலாக்கும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக இந்தப் பணியகம் திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். யாழ்ப்பாணத்தி
ல் மட்டுமல்ல கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இது போன்ற பணியகங்கள் திறக்கப்பட வேண்டும். இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் வேலைவாய்ப்புக்களை பெற வழிவகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’